மாவட்டக் கவுன்சில் தேர்தல் முடிவில் திமுக 13 மாவட்டக் கவுன்சில்களிலும் அதிமுக 13 மாவட்டக் கவுன்சில்களிலும் வென்றுள்ளது. சிவகங்கை மாவட்டக் கவுன்சில் இழுபறியாக உள்ளது.
2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 27 மாவட்டக் கவுன்சில்களில் 90 முதல் 100 சதவீத இடங்களை வென்று அனைத்து மாவட்டக் கவுன்சில்களையும் தன் வசம் வைத்திருந்த அதிமுக, தற்போது 50 சதவீத மாவட்டக் கவுன்சில்களை இழந்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சி எனத் தெரிவித்தாலும் ஜெயலலிதா பெற்றுத்தந்த பெருவெற்றியை தற்போது பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணியுடன் இருந்தாலும் அதிமுகவால் பெற முடியவில்லை என்பது அதிமுக தலைமைக்கு சிக்கலான ஒன்றுதான்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலையில் நடக்கும் தேர்தலில் இரு தரப்பிலும் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்கிற கேள்விக்கு ஸ்டாலின் சாதித்துள்ளார் என்று கூறலாம். அதிமுகவிடம் இருந்த பேர்பாதி மாவட்ட, ஒன்றிய வார்டுகளை திமுக கைப்பற்றும் தலைமையாக இருந்துள்ளார். இதில் தந்தையை மிஞ்சியுள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைத்து மேற்கு மாவட்டங்களிலும் , தென் மாவட்டங்களிலும் கால் பதிக்க எடுத்த முயற்சியில் ஸ்டாலின் தலைமை வெற்றி பெறவில்லை. மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்டவை அதிமுகவின் கோட்டையாகவே உள்ளன.
ஆனால் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களை திமுக தன்வசமாக்கியுள்ளது. திண்டுக்கல், மதுரை, நீலகிரி, சிவகங்கையில் திமுக காலூன்றியுள்ளது. ஆனால் விருதுநகர், தூத்துக்குடி, தேனியை திமுகவால் அசைக்க முடியவில்லை. கன்னியாகுமரியில் சற்று தீவிரமாகப் பணியாற்றியிருந்தால் திமுக வென்றிருக்கலாம். இங்கு சிபிஎம், திமுக ஒரு தொகுதிகூட பெறாததுதான் இதற்கு காரணம்.
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை திமுகதான் என்பதை நிலைநாட்டியுள்ளனர். திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டையில் திமுக கால் பதித்துள்ளது.
மத்திய மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர் , அரியலூர், கரூரில் திமுகவும் அதிமுகவும் சமபாதியாக வந்துள்ளன.
வட மாவட்டங்களான அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், திருவண்ணாமலையில் பாதிக்குப் பாதியாக இரு கட்சிகளும் பங்கிட்டுள்ளன.
திருவள்ளூரில் அதிமுகவும் திமுகவும் சமமாகப் பங்கிட்டுள்ளன.
சிவகங்கையில் சம இடங்களைப் பிடித்ததால் இழுபறி நீடிக்கிறது. மொத்தத்தில் ஆளுக்கு 13 மாவட்டக் கவுன்சில்களைப் பிடித்தாலும் அதிமுக தரப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்ந்த நாங்கள் எழுந்து நிற்கிறோம் என்றும், திமுக தரப்பில் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம் என்றும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற ரீதியில் இருதரப்பும் வெற்றியைப் பற்றி பேசுகின்றனர்.
இந்த முடிவு எந்தப் பக்கமும் வெற்றி தோல்வி குறித்து சந்தோஷமோ, சோர்வோ கொள்ளாத அளவுக்கு அமைந்துள்ளது.
மாவட்ட வாரியாக அதிமுக, திமுக மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில் பிடித்துள்ள இடங்கள் மற்றும் கடந்த 2011 தேர்தல் முடிவுகளுடன் ஒரு ஒப்பீடு.
1. ஈரோடு - அதிமுக வெற்றி
ஈரோட்டில் உள்ள 19 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 19-க்கு 19 இடங்களை அதிமுக கைப்பற்றியிருந்தது. தற்போது திமுக 5 இடங்களை கைப்பற்றியிருந்தாலும், அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
2. கன்னியாகுமரி- அதிமுக வெற்றி
கன்னியாகுமரியில் உள்ள 11 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி (காங்கிரஸ்) 5 இடங்களில் வெற்றி. கடந்த 2011-ம் ஆண்டு 4 இடங்களை அதிமுக கைப்பற்றியிருந்தது. பாஜக 2 இடங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறையும் அதே 2 இடங்களைப் பெற்றுள்ளது. 2011-ல் சிபிஎம் 2 இடங்களிலும், திமுக 1 இடத்திலும் வென்ற நிலையில் இம்முறை ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் 5 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில் அதிமுக மாவட்டக் கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
3. கரூர் - அதிமுக வெற்றி
கரூரில் உள்ள 12 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை அதிமுகவும், 3 இடங்களை திமுகவும் வென்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 12-க்கு 12 இடங்களை அதிமுக பெற்ற நிலையில் இம்முறை 3 இடங்களை திமுக பெற்றாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
4. கோவை - அதிமுக வெற்றி
கோவையில் மொத்தம் உள்ள 17 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 17-க்கு 16 இடங்களை அதிமுக வென்ற நிலையில் இம்முறை 4 இடங்களை திமுக பறித்துள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
5. சேலம் - அதிமுக வெற்றி
சேலம் மாவட்டத்தில், 29 மாவட்டக் கவுன்சிலர் இடங்களுக்கான தேர்தலில், அதிமுக கூட்டணி 23 இடங்களிலும், திமுக கூட்டணி 6 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலில் 29-க்கு 29 இடங்களையும் அதிமுக கைப்பற்றிய நிலையில், இம்முறை திமுக 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
6. தேனி- அதிமுக வெற்றி
தேனியில் உள்ள 10 இடங்களில் 8 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளை அதிமுகவும், 2 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளை திமுகவும் கைப்பற்றியது. 2011 தேர்தலில் தேனியில் 10-க்கு 10 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 2 இடங்களை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
7. அரியலூர் -அதிமுக வெற்றி
அரியலூரில் உள்ள 12 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களை அதிமுகவும், 1 இடத்தை திமுகவும் கைப்பற்றியுள்ளது. இங்கு 2011-ம் ஆண்டு அதிமுக 12 இடங்களில் 10 இடங்களைப் பெற்றது. அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்க வைத்துள்ளது.
8. தூத்துக்குடி - அதிமுக வெற்றி
தூத்துக்குடியில் உள்ள 17 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியது. 5 இடங்களில் திமுக வெற்றி. 2011 தேர்தலில் 17-க்கு 17 இடங்களை வென்ற அதிமுக இம்முறை திமுகவிடம் 5 இடங்களை இழந்துள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
9. நாமக்கல்- அதிமுக வெற்றி
நாமக்கல் மாவட்டக் கவுன்சிலர் 17 பதவிகளில் 12 இடங்களில் அதிமுகவும், 4 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் நாமக்கல்லில் 17-க்கு 17 இடங்களைப் பெற்ற அதிமுக இம்முறை திமுகவிடம் 4 இடங்களைப் பறிகொடுத்துள்ளது. ஆனாலும், அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
10. திருப்பூர் -அதிமுக வெற்றி
திருப்பூரில் உள்ள 17 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 4 இடங்களில் திமுக வெற்றி. 2011-ல் 17-க்கு 17 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக, இம்முறை 4 இடங்களை திமுகவிடம் இழந்துள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
11. விருதுநகர்- அதிமுக வெற்றி
விருதுநகரில் உள்ள 20 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி. 2011 தேர்தலில் 20-க்கு 20 இடங்களை வென்ற அதிமுக, இம்முறை 7 இடங்களை இழந்துள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்க வைத்துள்ளது.
12. கடலூர் - அதிமுக வெற்றி
மாவட்டத்தில் உள்ள 29 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களையும், திமுக கூட்டணி 14 இடங்களையும் பிடித்துள்ளது. அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் 29-க்கு 27 இடங்களில் அதிமுக வென்றது. இம்முறை 15 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஒரு இடம்கூட வெல்லாத திமுக இம்முறை 14 இடங்களை வென்றுள்ளது. நூலிழையில் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்க வைத்துள்ளது.
13. தருமபுரி - அதிமுக வெற்றி
18 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களில் அதிமுக கூட்டணி வென்றுள்ளது. 7 இடங்களில் திமுக வென்றுள்ளது . 2011 தேர்தலில் 18-க்கு 15 இடங்களை அதிமுக கைப்பற்றியது. இம்முறை அதிமுக 11 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. திமுக 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனாலும் அதிமுக மாவட்ட கவுன்சிலைத் தக்கவைத்துள்ளது.
14. சிவகங்கை - இழுபறி
சிவகங்கையில் உள்ள 16 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 8 இடங்களை திமுக கைப்பற்றியது. 8 இடங்களில் அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் 16-க்கு 16 வென்ற அதிமுக இம்முறை 8 இடங்களை திமுக கூட்டணியிடம் இழந்துள்ளது. இங்கு இழுபறியான நிலை உள்ளது.
15. திருச்சி - திமுக வெற்றி
திருச்சியில் 19 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. 5 இடங்களில் அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் திருச்சியில் மொத்தமுள்ள 24 இடங்களில் அதிமுக 22 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. 2 இடங்களை திமுக கைப்பற்றியிருந்தது. இம்முறை திமுக கூட்டணி 19 இடங்களைப் பெற்றுள்ளது. 17 இடங்களை இழந்த அதிமுக, மாவட்டக் கவுன்சில் இடத்தையும் இழந்தது.
16. திண்டுக்கல் திமுக வெற்றி
மாவட்டக் கவுன்சிலர் 23 இடங்களில் 15 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் 23 இடங்களில் 22 இடங்களை வென்ற அதிமுக இம்முறை 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. திமுக மாவட்டக் கவுன்சிலைக் கைப்பற்றியுள்ளது.
17. பெரம்பலூர் -திமுக வெற்றி
பெரம்பலூரில் உள்ள 8 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் 8-க்கு 8 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 1 இடத்தை மட்டுமே பெற முடிந்தது. மாவட்டக் கவுன்சிலை திமுகவிடம் இழந்துள்ளது.
18. மதுரை - திமுக வெற்றி
மதுரையில் உள்ள 23 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் திமுக 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 9 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். 2011 தேர்தலில் 23-க்கு 23 வென்ற அதிமுக இம்முறை 9 இடங்களை மட்டுமே வென்று திமுகவிடம் மாவட்டக் கவுன்சிலைப் பறிகொடுத்துள்ளது.
19. நீலகிரி - திமுக வெற்றி
நீலகிரியில் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 5 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 1 இடம் பெற்றது. இதனையடுத்து நீலகிரி மாவட்டக் கவுன்சிலை கைப்பற்றியது திமுக. 2011 தேர்தலில் 6-க்கு 6 இடங்களை வென்ற அதிமுக தற்போது ஒரே ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
20. நாகை- திமுக வெற்றி
நாகையில் உள்ள 21 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 15 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 6 இடங்களைப் பெற்றது. 2011 தேர்தலில் 21-க்கு 14 இடங்களை வென்ற அதிமுக தற்போது 6 இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
21. திருவள்ளூர் - திமுக வெற்றி
திருவள்ளூர் மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில் மொத்தமுள்ள 24 இடங்களில் திமுக 18 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி. 2011 தேர்தலில் 24-க்கு 23 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 5 இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
22. கிருஷ்ணகிரி- திமுக வெற்றி
கிருஷ்ணகிரியில் உள்ள 23 இடங்களில் 15 இடங்களை திமுக கைப்பற்றியது. 7 இடங்களில் அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் 23-க்கு 18 இடங்களை வென்ற அதிமுக தற்போது 7 இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தை பறிகொடுத்துள்ளது.
23. தஞ்சை - திமுக வெற்றி
தஞ்சையில் உள்ள 28 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 22 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 6 இடங்களில் அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் 28-க்கு 27 இடங்களை வென்ற அதிமுக தற்போது 6 இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைக் பறிகொடுத்துள்ளது.
24. திருவண்ணாமலை - திமுக வெற்றி
மொத்தமுள்ள 34 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் திமுக 24 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 8 இடங்களில் அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் 34-க்கு 31 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 8 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
25. ராமநாதபுரம் - திமுக வெற்றி
ராமநாதபுரத்தில் உள்ள 17 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை திமுக கைப்பற்றியது. மீதமுள்ள 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் 17-க்கு 15 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 5 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
26. திருவாரூர்- திமுக வெற்றி
18 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை திமுகவும், 3 இடங்களை அதிமுகவும் வென்றுள்ளன. 2011 தேர்தலில் 18-க்கு 12 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 3 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
27. புதுக்கோட்டை - திமுக வெற்றி
புதுக்கோட்டையில் உள்ள 22 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை திமுகவும், 8 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது. 2011 தேர்தலில் 22-க்கு 20 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 8 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. திமுகவிடம் மாவட்டக் கவுன்சில் இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago