தேர்தல் பணி முடிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு: அரியலூரில் சோகம்

அரியலூர் மாவட்டத்தில், தேர்தல் பணி முடிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், நேற்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இன்று (ஜன.3) அதிகாலை வரை நடைபெற்றது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அறிவுடைநம்பி(52) பணி முடிந்து இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆண்டிமடம் கடைவீதியில் சென்றபோது, நெஞ்சுவலி தாங்காமல் வண்டியிலிருந்து கீழே சாய்ந்தார். அப்போது அங்கு நின்றிருந்த மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE