வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 91,975 பதவிகளுக்கு, 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மேலும் 18,570 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், எஞ்சியுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் இன்று (டிச.30) நடைபெற்று வருகிறது. இந்த ஒன்றியங்களில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46,639 பதவிகள் உள்ளன. இதில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட பதவிகள் போக, இதர பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில், 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் ஜான்சன் (42) ஈடுபட்டிருந்தார். அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். இந்நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தலைமைக் காவலர் ஜான்சன் உயிரிழந்தார். வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தலைமைக் காவலர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago