சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் ஸ்டாலின் தேர்தல் நாளன்றும்கூட 'வாக்கிங்' போக முடிகிறது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கடம்பூர் அருகே கே.சிதம்பராபுரத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு பதிவு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக ஆட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததை பொறுக்கமுடியாமல் தலைவர்கள் சிலையை சேதப்படுத்தி இருக்கலாம்.
இது எதிர்பார்க்காமல் நடக்கின்ற விஷயம். தமிழகத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனம்.
மதுரை வர பயந்தவர்..
தமிழகத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதால்தான் ஸ்டாலின் நினைத்ததை எல்லாம் பேசுகிறார். நினைத்த இடங்களுக்கெல்லாம் செல்கிறார். காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். தேர்தல் நேரத்தில் கூட நடைப்பயிற்சியை வழக்கம் போல் கொண்டுள்ளார். அவர்கள் ஆட்சியில் இருந்த நேரத்தில் கூட அவர் மதுரைக்கு வர பயப்பட்டார். துணை முதல்வராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு வர பயந்தவர் இன்று சுதந்திரமாக மதுரை வருகிறார். இதிலிருந்தே சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று அவரது மனசாட்சிக்குத் தெரியும்.
தமிழகத்திற்கு தகுதிக்கேற்பவே விருது..
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. மேலும் 17 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து கொண்டுள்ளது. மத்திய அரசு நினைத்திருந்தால், அவர்கள் ஆட்சியின் உள்ள மாநிலத்துக்கு சிறந்த மாநிலம் என்ற விருதை வழங்கி இருக்கலாம். தமிழகம் உண்மையிலேயே தகுதி கொண்டுள்ளதாலேயே விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக முறையில் போராட வேண்டும்:
ஒரு சட்டத்திருத்தம் வரும்போது அதனை அவரவர் பாணியில் எதிர்கொள்வது அவர்களது உரிமை. ஜனநாயக முறையில் போராடலாம். மக்களவையில் விவாதம் செய்யலாம். வெளிநடப்பு அல்லது மக்களவையின் உள்ளேயே முற்றுகைப் போராட்டம் போன்ற பல்வேறு வழிகள் உள்ளன.
தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வீட்டு வாசல் முன்பு கோலமிட்டு உள்ளனர். இதுபோன்ற போராட்டங்கள் மூலமாக அவர்களது உணர்வுகளை தெரிவிக்கலாம். இதைவிடுத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டினால் வன்முறை வருகின்ற போது மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.
ஜனநாயக அரசியல் அமைப்பில் ஒரு சட்டம் இயற்றும்போது, மாறுபட்ட கருத்து இருந்தால் மத்திய அரசு சட்டம் என்றால் மக்களவை, மாநிலங்களவை இருக்கிறது. கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசுத் தலைவரை சந்தித்து மனு வழங்கலாம்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிடலாம். அங்கேயே முற்றுகைப் போராட்டம் மற்றும் தர்ணா நடத்தலாம். அதைவிடுத்து உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது நல்லதல்ல.
எத்தகைய போராட்டமாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும். ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி உண்டு என்ற நிலையில் ஆட்சி நடந்து வருகிறது. அனுமதி கோரினால் அதிமுக அரசு எந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்.
கோலத்துக்கும் கூட அனுமதி தேவை..
மார்கழி மாதம் இயற்கையாகவே தமிழர்கள் வீட்டு வாசல் முன்பு கோலம் போடுவது வழக்கம். அதற்கு அனுமதி தேவை இல்லை. நாட்டில் விவாதப் பொருளாக உள்ள சட்டம் குறித்து கோலமிடுவதும் ஒரு வகையான போராட்டம் தான். அதற்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.
இதனை ஸ்டாலின் உட்பட யார் செய்தாலும் தவறுதான். சட்டத்தை மதிக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்கு என்ன பங்கு இருக்கிறதோஅதே பங்கு எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு.
ஸ்டாலினுக்கு பதவி 'வெறி'..
ஸ்டாலின் பதவி வெறியோடு உள்ளார். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் அவருக்கு அக்கறை இல்லை. அதனாலேயே மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையும் அரசியலாக்கப் பார்க்கிறார். அவரது வெறி கனவாகத்தான் இருக்குமே தவிர நனவாகப் போவதில்லை.
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அதிமுக தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று ஏராளமானோர் போட்டியிட விண்ணப்பித்தனர். ஆனால் ஓரிடத்தில் ஒருவருக்கு மட்டும்தான் போட்டியிட அனுமதி வழங்க முடியும். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனியாக போட்டியிடுபவர்களின் பட்டியலை தலைமைக்கு அனுப்பியுள்ளோம். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான்.
வழக்கு திரும்பப் பெறப்படும்..
பத்திரிக்கையாளர்கள் கருத்துக்கணிப்பு கேட்பதற்கு சுதந்திரம் உள்ளது. அதற்கு மேலாக அவர்கள் கருத்துக் கணிப்பு எடுத்த இலங்கை அகதிகள் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் புகார் எதுவும் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
இல்லையென்றால் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, திருநெல்வேலியைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் மீதான வழக்கு திரும்ப பெறப்படும்"
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago