கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதை பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகள் தடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.28) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டம் வழங்குவதாக அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக பாஜகவினரும், இந்துத்துவ அமைப்பினரும் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவுக்கு வராமல் ரத்து செய்துள்ளதும், இதனால் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடைபட்டுள்ளதும் அறிய முடிகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது, விருது வழங்குவது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக கல்வி நிர்வாகங்களுக்கு உரிமையுண்டு. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள துறை வல்லுநர்களுக்கு அவர்கள் சாதித்துள்ள சாதனைகள் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் தலையிடுவது பொருத்தமானதல்ல. அத்தகைய நடைமுறைகள் அதிகரிக்குமானால் பல்கலைக்கழகங்களின் சுயாட்சித் தன்மை பாதிப்புக்குள்ளாகும்.
இதுமட்டுமல்லாது கவிஞர் வைரமுத்து, தமிழ் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளை ஆற்றியுள்ளார். திரைப்பட உலகில் பாடலாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவெடுத்தது பொருத்தமானதே. தனிப்பட்ட நபர் என்பதை விட தமிழ்மொழிக்கு சேவை செய்திருக்கிற ஒரு கவிஞர் என்கிற வகையில் அவரது பங்களிப்பினை கௌரவப்படுத்துவது சரியானதே.
தொடர்ந்து தமிழ்மொழிக்கு எதிராகவும், தமிழ் பண்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் தொடர் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.
பல்கலைக்கழக மற்றும் கல்வித்துறை செயல்பாடுகளில் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளின் தலையீடு அபாயகரமானது என்பதையும், தமிழக ஜனநாயக சக்திகள் இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இப்பின்னணியில் சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இந்துத்துவ அமைப்புகளின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகாமல் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிட வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago