நெல்லை சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பளுதூக்கும் போட்டி: 67 பல்கலைக்கழகங்கள்; 350 போட்டியாளர்கள்- இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வீராங்கனைகளுக்கு பளுதூக்கும் போட்டி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இப் போட்டியில் 67 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 350 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இது தொடர்பாக இப் பல்கலைக்கழக துணைவேந்தர் கா. பிச்சுமணி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இதுவரை 30-க்கும் மேற்பட்ட அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் தமிழ்நாடு அளவிலான வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான கபடி, கோ கோ, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகளப் போட்டிகளை நடத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து தமிழ்நாடு மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியை வேலூரில் 2 நாட்கள் நடத்தியிருந்தன. இதில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பளுதூக்கும் அணி 8 பதக்கங்களை பெற்று சிறப்பிடம் வகித்தது.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் சுந்தரனார் பல்கலைக்கழக பளுதூக்கும் அணியானது இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அகில இந்திய அளவில் பல்கலைக்கழக வீராங்கனைகளுக்கான பளுதூக்கும் போட்டியை சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இப் போட்டி இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை பல்கலைக்கழக வ.உ.சி. அரங்கத்தில் நடைபெறுகிறது. இப் போட்டியில் நாட்டிலுள்ள 20 மாநிலங்களில் இருந்து 67 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 350 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்திலிருந்து 8 பல்கலைக்கழகம், அடுத்ததால தமிழகம், உத்தரபிரதேசத்திலிருந்து தலா 6 பல்கலைக்கழகங்களில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இப் போட்டியானது 45,49,55,59,64,71,76,81,87, 87 பிளஸ் கிலோ எடை என்று மொத்தம் 10 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதல் நாள் 4 பிரிவுகளுக்கும், 2-வது நாள் 5 பிரிவுகளுக்கும், 3-வது நாள் ஒரு பிரிவுக்கும் போட்டி நடைபெறுகிறது.

இப் போட்டிகளை இன்று காலை 9 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வரும் 30-ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் பரிசுகளை வழங்குகிறார். இப்போட்டிக்கு தமிழ்நாடு பளுதூக்கும் சங்கத்திலிருந்து நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக வீராங்கனைகளுக்கான பளுதூக்கும் போட்டியில் முதலிடத்தை கோழிக்கோடு பல்கலைக்கழகமும், 2-வது இடத்தை பஞ்சாப் பல்கலைக்கழகமும் பெற்றிருந்தது.

சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் 8 வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் தர்ஷினி என்ற வீராங்கனை வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். தற்போது நடைபெறும் போட்டியில் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் 10 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE