ரஜினி ஒரு படம் நடித்து கே.பாலசந்தர் குடும்பத்துக்கு உதவவேண்டும்: கே.ராஜன் பேச்சு

இயக்குநர் பாலசந்தர் குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க ரஜினி ஒரு படம் நடித்துத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்தார்.

இயக்குநர் சிகரம் என பாராட்டப்பட்டவர் கே.பாலசந்தர். ரஜினி, கமல் என்ற இரண்டு உச்ச நடிகர்களை உருவாக்கியவர். அவரின் 5-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள குமார ராஜா முத்தையா ஹாலில் நேற்று நடைபெற்றது. விழாவில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் பெயரில் ‘கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது. சங்கப் பலகையை முன்னாள் மாநகர மேயர்.சைதை துரைசாமி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் கே.பாலசந்தரைப் பற்றி நடிகர் சிவகுமார், இயக்குநர் சரண், நடிகர் ராஜேஷ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.

இயக்குநர் சரண் பேசும்போது, “இயக்குநர் பாலசந்தர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட சிற்பி. பலர் வாழ்க்கையை ஜொலிக்க வைத்தவர். நாங்கள் அனைவரும் அவருடைய பக்தர்கள். பக்தர்கள் ஒன்றுகூடி ரசிகர்கள் சங்கம் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

விழாவில் நடிகர் கே.ராஜன் பேசியதாவது:

''இயக்குநர் பாலசந்தரால் ஏராளமான இயக்குநர்கள் உருவானார்கள். அவர் படங்களைப் பார்த்து உருவான இயக்குநர்கள், அவரால் திரையுலகிற்கு வந்தவர்கள், அவரால் உருவாக்கப்பட்ட நடிகர்கள் ஏராளம். அவ்வளவு பேர் இருக்கும்போது நடிகர் சிவகுமாரும், சைதை துரைசாமியும், இயக்குனர் சரணும், அவருடன் பணியாற்றியவர்கள் மட்டுமே இங்கு இருக்கிறார்கள். இதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

நாய் ஒன்றுக்குத்தான் நன்றி இருக்கும் என்று நினைக்கிற இந்தக் காலத்தில் பாலசந்தருடன் பணியாற்றியவர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வியக்கும் வண்ணம் அவருடன் பணியாற்றியவர்கள் இணைந்து ரசிகர்களாக மாறி சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகிற்கு உயிரூட்டியவர், பலரையும் உருவாக்கியவர் கே.பாலசந்தர். அவரால் உயர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. பாலசந்தர் குடும்பம் மிகுந்த சிரமத்தில் உள்ளது. அவரது குடும்பம் கஷ்டப்படக்கூடாது, பொருளாதாரச் சிக்கலில் வாடக்கூடாது. அதைப் போக்க பாலசந்தர் குடும்பத்துக்கு ரஜினி ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும். ரஜினி அதை விரைவில் செய்து கொடுப்பார் என நம்புகிறேன்”.

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE