மக்களை திசைதிருப்பி ஆதாயம் தேட திமுக, காங்கிரஸ் முயற்சி: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

குடியுரிமை பிரச்சினையில் மக்களை திசைதிருப்பி திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

ஜார்கண்ட் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. அங்கு பாஜக இப்போதும் வலுவோடு உள்ளது. வெற்றி வாய்ப்பை தரவில்லை என்றாலும் இவ்வளவு வாக்குகளை தந்த அந்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கூட்டணி சரியாக அமையாவிட்டால் தேர்தல் வியூகத்தில் சிறு சறுக்கல் ஏற்படும் என்பதற்கு ஜார்கண்ட் தேர்தல் ஓர் உதாரணம்.

மாநில கட்சிகள் மேலெழுந்து வருகின்றன. எனவே, கூட்டணிகள் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மத்தியில் பாஜக பலமாக உள்ளது. மாநிலங்களில் சில இடங்களில் சிறு சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறோம். அதனை சரிசெய்யக்கூடிய வேலைகளை பாஜக செய்யும்.

மக்களை திசைதிருப்பி, அச்சத்தை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடியே பழக்கப்பட்டுவிட்ட திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடியுரிமை பிரச்சினையை கலவரம் ஏற்படுத்த வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

திமுக நடத்திய போராட்டம் தேவையில்லாத ஒன்று என 64 சதவித மக்கள் ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். எனவே, திமுக இதுபோன்ற ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு உருப்படியாக மக்களுக்கு ஏதாவது சேவை செய்தால் அவர்களுக்கு நல்லது. இந்த போராட்டம் உள்ளாட்சித் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சிறுபான்மையினர் மக்களிடம் இருந்தே அவர்களுக்கு எதிர்ப்பு வந்துள்ளது. பிரச்சினைகளை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதால் தான் சில சமுதாயங்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நலன்களை எல்லாம் இழந்து நிற்கிறார்கள் என்பதை அவர்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடிய கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். இந்த இரு கட்சிகள் தான் நாட்டையும், தமிழ்நாட்டையும் அழித்தார்கள்.

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை தான் தற்போது நிறைவேற்றியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் குளிர் காய்வதற்கு சில பிரச்சினைகளை எடுப்பார்கள். அவ்வாறு தான் இந்த பிரச்சினையை பயன்படுத்த பார்க்கின்றனர். இதில் எந்த பலனும் அவர்களுக்கு கிடைக்காது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் பாஜக உட்கட்சி தேர்தல் இம்மாதம் நடைபெறவில்லை. எனவே, அடுத்த மாதம் தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார் என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE