உள்ளாட்சித் தேர்தல்: 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (டிச.24) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதற்கு வசதியாக மொத்தம் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், அமைதியாகத் தேர்தலை நடத்த இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்கு முன்பாக, அதாவது 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், அதேபோல், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 28 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. இவை தவிர வாக்கு எண்ணும் நாளன்றும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த ஆணைப்படி முதல் இரு கட்டத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவடைகிறதோ இல்லையோ, அன்று மாலை 5 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது வணிகம் தொடங்கிவிடும். அதுமட்டுமின்றி, எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வாக்குப்பதிவு நடைபெறுகிறதோ, அந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்த உதவாது என்பது மட்டுமின்றி, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு என்பது வாக்குப்பதிவு நாளின் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் நிகழ்வு அல்ல. உள்ளாட்சித் தேர்தல்களுக்கும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஒரே ஒரு வாக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும் என்பதால் வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்குள் அனைவரும் வாக்களித்து விடுவர் என்பது மட்டுமின்றி, அடுத்த சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடும். அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் நடந்த தடமே தெரியாத அளவுக்கு சூழல் மாறிவிடும்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் அப்படிப்பட்டதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சீட்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஊரக உள்ளாட்சிகளில் ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் என மொத்தம் 4 வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 750 வாக்குகள் இருக்கும் என்பதாலும், வாக்காளர்கள் வாக்குச்சீட்டை நன்கு ஆராய்ந்து தான் வாக்களிக்க முடியும் என்பதாலும் வாக்குப்பதிவுக்கு அதிக நேரம் பிடிக்கும். அதனால், மாலை 5 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடைய வாய்ப்புகளே இல்லை.

மாலை 5 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு அடையாளச்சீட்டு கொடுத்து, அவர்கள் அனைவரும் வாக்களித்து முடிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் இரு மணி நேரம் வரை ஆகும். அத்தகைய சூழலில் தேர்தல் முடிவடைவதற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கே மதுக்கடை திறக்கப்பட்டால் அது அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கான சூழலைச் சீர்குலைத்து விடும்.

அதுமட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் போட்டியிடுவர் என்பதாலும், போட்டி கடுமையாக இருக்கும் என்பதாலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய மோதல்கள் அதிகமாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களின் போது வாக்குப்பதிவு நாள் முழுவதும் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை திறந்து வைக்கலாம்; தேர்தல் நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என்பதும் நல்லதல்ல.

போக்குவரத்து வசதி அதிகரித்து விட்ட சூழலில் 5 கிலோ மீட்டருக்கும் அப்பால் சென்று மதுவை வாங்கி வருவதோ, தேர்தல் நடைபெறாத அண்டை மாவட்டத்துக்குச் சென்று மதுப்புட்டிகளை வாங்கி வருவதோ கடினமான ஒன்றல்ல. அதேபோல், 25 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் இருக்கும் என்பதால் மதுவை வாங்கி வைக்கவும் வாய்ப்புள்ளது. இவை அனைத்துமே தேர்தல்களில் மோதலையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு தான் வழிவகுக்கும்.

எனவே, முதல் கட்டத் தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாட்கள் முன்பாக அதாவது 25 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 30 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து தான் மதுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்