சதுரங்கப்பட்டினம் டச்சுக் கோட்டையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தொல்லியல் துறை முடிவு

By செய்திப்பிரிவு

சதுரங்கப்பட்டினத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள டச்சுக் கோட்டையை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசித்து வரும் நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொல்லியில் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள சதுரங்கப்பட்டினம் நகரம், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் எனப்படும் வணிகர்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இப்பகுதியில் வணிக நோக்கத்துக்காக பெரிய மதில் மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய கோட்டை ஒன்றை அமைத்தனர். இதில், பெரிய அளவிலான தானியக் கிடங்குகள், யானைகளை கட்டுவதற்கான அமைப்புகள் மற்றும் குதிரை லாயங்கள் போன்ற வசதிகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சமாதிகளுடன் கூடிய இடுகாடு ஒன்று அமைந்துள்ளது.

கடந்த 1818-ம் ஆண்டு, ஆங்கிலேயர் இந்நகரத்தின் மீது போர் நடத்தி கோட்டையை கைப்பற்றியதாக அப்பகுதியில் சான்றுகள், கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் துறையின் வரலாற்று தகவல்களில் அறிய முடிகிறது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பே, மாமல்லபுரம் துறைமுகப்பட்டினத்துக்கு இணையாக சதுரங்கப்பட்டினத்திலும் துறைமுகங்கள் செயல்பட்டுள்ளன. இங்கிருந்து நறுமணப் பொருட்கள் மற்றும் ஆடைகள், வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

இதனால், மாமல்லபுரத்துக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டச்சுக் கோட்டையையும் கண்டு ரசிக்கின்றனர். தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோட்டையை தற்போது இலவசமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், டச்சுக் கோட்டையை கண்டு ரசிக்க விரைவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும்போது, “சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள டச்சுக் கோட்டை மற்றும் அதில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டினரிடம் ரூ.300, உள்ளூர் நபர்களுக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகிறது. விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்றனர்.

இதுகுறித்து, உள்ளூர் சுற்றுலா பயணிகள் சிலர் கூறும்போது, “மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்கைளை கண்டு ரசிப்பதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சாளுவான் குப்பத்தில் இலவசமாக கண்டு ரசித்து வந்த புலிக்குகை சிற்பத்துக்கும் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது, சதுரங்கப்பட்டினம் டச்சுக் கோட்டையை பார்க்கவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அதிருப்யை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கட்டண வசூலிப்பு திட்டத்தை தொல்லியல் துறை கைவிட வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE