மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு ‘ஃபுட்பாத்’- மருத்துவ சிகிச்சை

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நலவாழ்வு முகாமில், பாதவெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் தவிக்கும் யானைகளுக்கு ஃபுட்பாத் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்றுவரும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாமில், 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இங்கு

யானைகளுக்கு சத்தான உணவு, பசுந்தீவனங்கள், அளிக்கப்படுகின்றன. மேலும், யானைகளின் உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கமருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் நாட்களில், அங்குள்ள யானைகளின் உடல் சார்ந்த பிரச்சினைகள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

பிரம்மாண்டமான உருவத்தில் உள்ள யானைகளுக்கு அவற்றின் கால்கள் மிகவும் முக்கியமானவை. யானைகளின் கனத்த உருவத்தை தாங்கி நிற்கும் அதன் கால்களில் ஏதேனும் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் முடங்கிவிடும். குறிப்பாக, அவற்றின் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகள், கொப்பளங்கள், சிறு காயங்கள் உள்ளிட்டவை யானைகளை பெரிதும் வேதனைப்படுத்தும்.

இதுபோன்ற காலங்களில் யானைகளால் நிற்கவோ, நடக்கவோ இயலாது. எனவே, நலவாழ்வு முகாமில் உள்ள யானைகளின் பாதப் பிரச்சினைகளை கவனத்தில்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முகாமுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி கால்நடை மருத்துவக் குழுக்கள், பாதப் பகுதி தளர்ந்துபோன வயதான யானைகள், பாத வெடிப்பு மற்றும் கால் நக காயங்களால் அவதியுறும் யானைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு `ஃபுட் பாத்' என்ற சிகிச்சையை அளிக்கின்றனர்.

பெரிய பாத்திரத்தில் கரைக்கப்பட்ட மருந்து கரைசலை ஊற்றி, பாகன்களின் உதவியுடன் அதில் யானையின் கால்களை வைக்கச் செய்து, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து கரைசலில் யானையின் கால்கள் ஊறிய பின்னர், பாதங்களில் ஏற்பட்டுள்ள காயங்களின் தீவிரத்தைப் பொருத்து, பிற சிகிச்சைகள் தொடர்கின்றன.

பாத நோய்கள்

வனங்களில் மண் தரையில் நடக்கும் யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுவதால், பெரும்பாலும் அங்குள்ள சிமென்ட் தரையில் நிற்க வைக்கப்படுகின்றன. இயல்பை மீறி சாலைகளிலும் நடக்க வைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் உபாதைகளே, யானைகளுக்கு ஏற்படும் பாத நோய்கள்.

எனவே, முகாமில் உள்ள கோயில் யானைகளுக்கு ஒவ்வாமையால் ஏற்படும் பாத வெடிப்புகளை, தனி மருத்துவக் குழுக்கள் மூலமாக கண்காணித்து, உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE