முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வாக்காளர் சீட்டுகளை இன்று வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வாக்காளர் சீட்டுகளை உரியவர்களிடம் இன்று வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 25-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக் கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் கூறியதாவது:

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில், வாக்காளர் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு 24-ம் தேதிக்குள் (இன்று) விநியோகிக்க வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலின்படி துணை வாக்காளர் பட்டியல் தயார் செய்து அச்சிட வேண்டும். முதல்கட்ட தேர்தல் பணியாளர்களுக்கு, 26-ம் தேதி பணி நியமன ஆணைகளை அளிக்க வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச் சாவடிகளைக் கண்டறிய, காவல்துறையுடன் ஆலோசனை நடத்தி, அதுகுறித்த பட்டியலை ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பிற தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கவேண்டும். கட்சி சார்ந்த தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மற்றும் கட்சி சாரா தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு, முறையாக பிரித்து தயார் நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை ஆணையர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாநில தேர்தல்ஆணைய செயலர் இல.சுப்பிரமணியன், டிஜிபி (தேர்தல்) ச.ந.சேஷசாய், எஸ்பி (தேர்தல்) ப.கண்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE