குடியுரிமை சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ், கம்யூ. கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றன: பாஜக தேசிய பொதுசெயலாளர் முரளிதரராவ் குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றன என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம்குறித்த விவாதம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. மன்றத்தின் துணைத்தலைவர் காயத்ரி வரவேற்புரையாற்றினார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் ஆகியார் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கினர்.

முரளிதர ராவ் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களிடம் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த சட்டம் குறித்து தெரியாமல் போராட்டம் நடத்தி, தவறான தகவலை பரப்பி வருகின்றன’’ என்றார்.

முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் பேசுகையில், “இந்தியாவில் வசித்துவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தஇந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு உரியஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவர்கள் 5 ஆண்டுகள்இந்தியாவில் வசித்திருந்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமைவழங்கலாம் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வளவோ இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இஸ்லாமியர்கள் செல்லாமல், இந்தியாவில் குடியேறுகின்றனர். இந்தியாவை இஸ்லாமிய நாடாகமாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர்” என்றார்.

பாஜக மூத்த தலைவர்இல.கணேசன் செய்தியாளர்களி டம் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள், பலன் பெறுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. வடக்கிலும், வடகிழக்கிலும்தான் அதிகமாக உள்ளனர். பாதிப்பு இல்லாத மக்களுக்காக போராட்டம் நடத்துவது தேவையில்லாதது. இந்த சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களின் விருப்பம் இந்திய குடியுரிமை அல்ல. அவர்களின் வாழ்நாள் கனவு என்பது, திரும்பவும் இலங்கைக்கு சென்று தங்களுடைய சொந்த ஊரில் வசிக்க வேண்டும் என்பதுதான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE