தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலை காப்பாற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைக் காப்பாற்றவும் மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து சுமார் 600 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவர்களை விரட்டியடித்தனர்.

மேலும், மீன்பிடி வலைகளையும் வெட்டி எறிந்தனர். இதனால் உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் மீனவர்கள் அங்கிருந்து தப்பித்து கரை சேர்ந்தனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

எனவே, மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை அரசால் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதை உறுதிபடத் தெரிவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்கவோ அல்லது நிவாரணத் தொகை வழங்கவோ வலியுறுத்த வேண்டும். குறிப்பாக கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் வலி யுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE