வெறிநாய்க்கடி நோய் அதிகரிப்பு எதிரொலி; தடுப்பூசிகளை இருப்பு வைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் ‘ரேபீஸ்’ எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமின்றி நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்நோயால் சராசரியாக ஆண்டுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மட்டும் இந்நோய் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

ரேபீஸ் நோய் அதிகரித்து வருவதையொட்டி, இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அளவு தடுப்பூசியை கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ரேபீஸ் நோய் தடுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 6 மாதத்துக்கு தேவையான ரேபீஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து தடுப்பூசியும் தோல் வழியாகவே செலுத்தும் வகையில் இருப்பதுடன், இலவசமாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசு தற்போது அறிவுறுத்தியுள்ள நெறிமுறையை, தமிழகம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கடைபிடித்து வருகிறது. பொதுமக்களுக்கு ரேபீஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் கடித்தால் அலட்சியமாக இருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE