சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே ஸ்டாலின் பேரணி: அமைச்சர் உதயகுமார் தாக்கு

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரணி நடத்துகிறார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

பிரச்சாரத்தின் ஊடே செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதல்வரின் சாதனைகளை எடுத்துக்கூறி மக்களை சந்தித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக 100 சதவீத வெற்றி பெறுவோம்.

தமிழக அரசு குடிமராமத்துப் பணிகள் மூலம் நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தருகிறோம். அதனை எல்லாம் எடுத்துச் சொல்லி நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. ஆனால் அப்படி அமைதிப் பூங்காவாக இருக்கக் கூடாது என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் உள்ள ஸ்டாலினின் எண்ணம். அதனாலேயே இந்தப் பேரணியை நடத்தியுள்ளார்.

தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். தமிழகம் பற்றி எரிய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஏனென்றால் தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து ஸ்டாலினின் வயிறு பற்றி எரிகிறது.

அதனால் அதிமுக அரசு மீது அவதூறு பரப்பி பழிச்சொல் கற்பித்து வருகிறார்.

திருக்குரானில், அவதூறு மூலமாக ஒருவரை வீழ்த்த நினைத்தால் அது மிகப் பெரிய பாவம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பாவத்துக்கான பலன் வரும் என்றும் சொல்லப்படுகிறது. இதைத்தான் நான் ஸ்டாலினுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து முதல்வர்களும் தமிழகத்தின் முதல்வரை பார்த்தே எளிமை, நீர் மேலாண்மையை கற்றுக் கொள்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது" எனப் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE