குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக பேரணி; கூட்டணிக் கட்சிகளின் 10 தலைவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக பேரணி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை எழும்பூரில் தொடங்கியது.

விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் பங்கேற்றுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்களும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 17-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் 23-ம் தேதி மாபெரும் பேரணி நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேரணி யில் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அவசர வழக்கு

பேரணிக்கு அணுமதியளிப்பது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். காவல்துறை யின் அனுமதியை மீறி திமுக பேரணி நடத்தினால் அதை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகளை மீறினால் வீடியோ மூலம் அதைப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உள்துறை மற்றும் காவல்துறை உரிய பதில் அளிக்குமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

அதே வேளையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உயர் நீதிமன்ற நிபந்தனைகளின்படி பேரணி நடத்தப்படும் என்றார்.



இந்நிலையில் எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகம் அருகில் உள்ள சந்திப்பில் இருந்து இன்று காலை பேரணி தொடங்கியது. கூவம் கரை யோரத்தை ஒட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையைச் சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் விளையாட்டு திடலில் பேரணி நிறைவடைய உள்ளது.

பேரணியின் முடிவில் ராஜரத்தினம் திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் தலைவர்கள் பேசுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE