உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணியில் விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகளை மட்டும் ஈடுபடுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தேர்தல் பணியில் விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகளை மட்டும் ஈடுபடுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெற உள்ளன. இத்தேர்தல் பணியில் மொத்தம் 4 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான தேர்தல் பயிற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன.

இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன் கடந்த 9-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், "ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்களில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு அனை்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் விரும்பினால் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

அனைத்து அரசுப் பணி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகளை மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், விருப்பம் இல்லாத மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் இந்த ஆணையத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகளின் திறன் மற்றும் விருப்ப அடிப்படையில் மட்டுமே அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE