தேசத்தை பாதுகாக்கவே குடியுரிமை திருத்த சட்டம்: பாஜக மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

தேசத்தை பாதுகாக்கவே குடியுரிமை திருத்த சட்டத்தைமத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், இதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை கண்டித்தும் கோவை டாடாபாத் பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாஜக மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செயலர் கிஷோர்குமார், விஷ்வ இந்து பரிஷத் மாநில நிர்வாகி சிவலிங்கம், ஆர்எஸ்எஸ் மாநகரத் தலைவர் ராஜா, பாஜக மண்டலத் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம், தேசத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. இந்த தேசம் ஒரு சத்திரம் போல, யார் வேண்டுமானாலும் குடியேறலாம், யார் வேண்டுமானாலும் கலவரத்தைக் உண்டு பண்ணலாம் என்ற நிலையை மாற்றி, தேச நலனில் அக்கறை கொண்டு, இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்களும் தவறான கருத்துகளைக் கூறுவதுடன், வங்க தேசத்திலிருந்து வரும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை இந்த சட்டம் தடுக்கிறது.தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் செயல்படுகின்றன. இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

இங்குள்ள இலங்கைத் தமிழர்கள், இலங்கையில் குடியேறினால் மட்டுமே, அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், பாதுகாக்கவும் உதவும். எனினும், தமிழர்கள் இங்கு வந்தால், மத்திய அரசு நிச்சயம் கனிவுடன் பரிசீலிக்கும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE