தமிழகத்தில் தாய், சேய் இறப்பின்றி 10,065 பிரசவங்கள்: முன்மாதிரி மாவட்டமாக விளங்கும் அறந்தாங்கி சுகாதார மாவட்டம்

By செய்திப்பிரிவு

கே.சுரேஷ்

நடப்பு ஆண்டில், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் தாய், சேய் இறப்பின்றி 10,065 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதன் மூலம் இம்மாவட்டம் தமிழகத்தில் முன்மாதிரி மாவட்டமாக சாதனை படைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இப்பகுதியில் நடப்பு ஆண்டில் தாய், சேய் இறப்பின்றி 10,065 பிரசவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் அறந்தாங்கி சுகாதார மாவட்டம் தமிழகத்தில் முன்மாதிரி மாவட்டமாக சாதனை படைத்துள்ளது.

கூட்டு முயற்சியின் வெற்றி

இத்தகைய சாதனையை நிகழ்த்தியது குறித்து அறந்தாங்கி சுகாதார துணை இயக்குநர் பி.கலைவாணி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: ஒரு பெண் கர்ப்பிணியானவுடன் அந்த கிராம சுகாதார செலிவியர்கள் மூலம் பதிவு செய்து, ரத்த அழுத்தம், உப்பு, ரத்த சோகை, எடை, சர்க்கரை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குழந்தையின் வளர்ச்சி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்படும். பிரசவத்துக்கு முந்தைய 2 மாதங்கள் வாரந்தோறும் பரிசோதிக்கப்படும்.

அதில் உடல்நலக் குறைபாடு, மனநலக் குறைபாடு உள்ளிட்ட காரணங்கள் மூலம் பிரசவத்தின்போது கூடுதல் கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து, பிரசவ தேதிக்கும் சில நாட்கள் முன்கூட்டியே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்பு மையம் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து பிரசவம் பார்க்கப்படும்.

அதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி முதல் நடப்பு ஆண்டில் இதுவரை 5,032 சுகப்பிரசவம் உட்பட மொத்தம் 10,065 பிரசவங்கள் நடந்துள்ளன.

அதில், 5 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். தாய், சேய் இறப்பு இல்லாததால் தமிழகத்தில் முன்மாதிரி சுகாதார மாவட்டமாக அறந்தாங்கி அமைந்துள்ளது. இது மருத்துவர்கள், செவிலியர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.

தாய், சேய் மனநல சேவை

இதுகுறித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது:

உயிருடன் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதையே பேறுகால மரணத்தின் குறியீடாக உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் லட்சத்துக்கு 130 பேர் உயிரிழக்கின்றனர். இதை 2030-க்குள் 70 ஆக குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதை விஞ்சும் விதமாக தற்போது தமிழகத்தில் 63 ஆக உள்ளது. இதை இன்னும் குறைப்பதற்கான பணிகளில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

உடல் மற்றும் குடும்ப சூழலால் கர்ப்பிணிகள் மனநல பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கும், மனநல நோயாளிகளுக்கான பிரசவ கால மனநல சிகிச்சை அவசியமாகிறது. அந்த வகையில் 2 ஆதரவற்ற கர்ப்பிணிகள் உட்பட 5 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. தாய், சேய் மனநல சேவை வழங்குவதில் புதுக்கோட்டை மாவட்டம் முன்னேறி வருகிறது. கர்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும் தாய், சேய் மனநலத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேக மையம் ஏற்படுத்தும் முயற்சியிலும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஈடுபட்டுள்ளார். மேலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, சிகிச்சை, பிரசவம், உதவித் தொகை, வாகன வசதி என பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்