மதத்தை மையமாக வைக்காமல் மனிதத்தை மையமாக வைத்து குடியுரிமை சட்டத்தைத் திருத்துங்கள்: தமிழருவி மணியன்

"மதத்தை மையமாக வைக்காமல் மனிதத்தை மையமாக வைத்து குடியுரிமை சட்டத்தைத் திருத்துங்கள்" என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

மதுரையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் "குடியுரிமை சட்டத்தில் மதத்தை மையமாக வைத்து இருப்பதைவிட மனிதத்தை மையமாக வைத்திருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச அகதிகளுக்கு இங்கு குடியுரிமை வழங்குவதில் மகிழ்ச்சிதான். ஆனால் அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களையும் இந்தப் பட்டியலில் இணைத்திருக்க வேண்டும். பர்மாவில் இருக்கக்கூடிய ரோஹிங்கியா சிறுபான்மையினர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

உரிமைகளை இழந்து நிற்கும் மக்கள் அனைவரையும் மதத்தை அடிப்படையாக வைக்காமல் மனிதத்தை மையமாக வைத்து இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு" என்று கூறினார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, "ரஜினி அரசியலுக்கு வருவது சர்வ நிச்சயம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதனை முறையாக அறிவிப்பார்" எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE