தாமலேரிமுத்தூர் கிராமத்தில் கட்டுப்பாடு; கள்ளச்சாராயம் விற்கவோ டாஸ்மாக் மது அருந்தவோ கூடாது: வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகம்

சாராயம் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாமலேரிமுத்தூரில் பொதுமக்கள் நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இப் பகுதியில் காவல் துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி சாராய வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். மேலும், சாராய வியாபாரிகள் குறித்து காவல் துறையினரிடம் தகவல் அளிக்க வேண்டும் என ஜோலார்பேட்டை காவல் நிலையம் சார்பில் சமீபத்தில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், தாமலேரி முத்தூர் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளதாக நோட்டீஸ் அச்சிட்டு பொதுமக்களிடம் நேற்று விநியோகிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

அந்த நோட்டீஸில் தாமலேரி முத்தூர் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யக்கூடாது, அதேபோல், தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பள்ளி, பொது இடம், கோயில் உள்ளிட்ட பகுதிகளில் யாரும் மது அருந்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் மீறி யாராவது சாராயம் விற்பனை செய்வதோ, பொது இடத்தில் மது அருந்துவதோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் காவல் துறையினரிடம் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அந்த நோட்டீஸில் அச்சிடப்பட்டு வீடு, வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE