உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முதல்முறையாக பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைக் கண்காணிக்க முதல்முறையாக பறக்கும் படைகளை மாநிலதேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிப்பதை உறுதிசெய்ய, மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம், முதன்மை பொறுப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்வரை, பறக்கும் படைகள் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தேர்தல் பார்வையாளர்களின் கைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE