ஒரு நாளுக்கு 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் ஓட்டல்களின் விவரம் சேகரிப்பு: மறுபயன்பாட்டுக்கு விற்பதை தடுக்க தீவிரம்

மறுபயன்பாட்டுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க ஒரு நாளுக்கு 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் ஓட்டல்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையோரங்களில் வைக்கப்படும் ஒருசில சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய எண்ணெய் யைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை சாப்பிட்டால் குடல் புற்றுநோய், இருதய பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

எனவே, ஒருமுறை பயன்படுத்தும் எண்ணெய் மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பயோ டீசல் தயாரிக்கும் ஆலை களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஒரு நாளுக்கு 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் ஓட்டல்களில் இருந்து ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை, பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் வாங்குவதாக கூறப்படுகிறது.

எனவே, அந்த ஓட்டல்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில்உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பயோ டீசல் தயாரிக்க..

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒரு நாளுக்கு 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் ஓட்டல்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவர்களிடம், ஏற்கெனவே மறு பயன்பாட்டுக்கு எண்ணெய் விற்பனை செய்ய கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்கும் பணி, விரைவில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அவர்கள் மூலம், எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோ டீசல் தயாரிக்கும் ஆலையில் ஒப்படைக்கப்படும்.

இதன் மூலம், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறு பயன்பாட்டுக்கு வராமல் பயோ டீசல் தயாரிக்க பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE