கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூட்டுறவு சங்கம், பண்டகசாலைக்கு ரூ.229 கோடி நிதி வழங்க வேண்டும்: டெல்லி கருத்தரங்கில் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை

தமிழகத்தில் கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு சங்கங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.229 கோடி நிதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கோரிக்கை விடுத்தார்.

டெல்லியில் உள்ள தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் சார்பில், ‘நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மதிப்புச் சங்கிலிகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கை தொடங்கிவைத்து, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:

மதிப்புச் சங்கிலியானது வேளாண் விளைபொருட்களின் சந்தை விலையை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அதிக வருவாய் பெற்றுத் தரும். நுகர்வோருக்கும் பலன் தருவதோடு, வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

தமிழகத்தில் கூட்டுறவு பண்டகசாலைகள் 2019-20 ஆண்டில் அக்டோபர் வரை ரூ.2,260 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளன. இதில், 288 கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள் வாயிலாக அதிகபட்சமாக 20 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் ரூ.905 கோடிக்கு மருந்துகள் விற்கப்பட்டுள்ளன.

3 நகரும் அம்மா பண்ணை பசுமை கடைகள் உட்பட 79 கடைகள் மூலம் இதுவரை ரூ.150 கோடிக்கு காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன. விலை கட்டுப்பாட்டுநிதி உதவியுடன் கிலோ ரூ.40-க்கு174 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் 2.05 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 34,773 நியாயவிலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில், கூட்டுறவு துறையின் 32,946 நியாயவிலை கடைகள் மூலம் 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தனியார் துறைகளின் கடுமையான போட்டிகளுக்கு இடையிலும், தமிழகத்தில் கூட்டுறவு பண்டகசாலைகள் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த நிலையில், அவற்றின் நிதிநிலை, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 23 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளுக்கு ரூ.115 கோடி, 128 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு ரூ.64 கோடி, 370 கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்க ரூ.50 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்.

நிபுணர் குழு அமைத்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில், தமிழகத்தில் விளைவிக்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு வேளாண்மை மதிப்புச் சங்கிலி அமைக்க வேண்டும். இதற்கு நிதியுதவி அளித்தால் தமிழக அரசு இணைந்து செயல்பட தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப்குமார் நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE