குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் முஸ்லிம்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 2 இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை சட்டத் திருத்தத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா நகரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அண்ணா நகர் பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும் ஒன்று திரண்ட முஸ்லிம்கள், அண்ணா நகர் - திருமங்கலம் சந்திப்பில் இருந்து ஜிஎஸ்டி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். பின்னர், அங்கு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். போலீஸ் அனுமதியுடன் இந்த போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

இதேபோல, சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் உள்ள பர்மா தமிழ் முஸ்லிம் மசூதி மற்றும் நேதாஜி நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முஸ்லிம்கள், பெண்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி சிலையில் இருந்து வைத்தியநாதன் மேம்பாலம் வரை பதாகைகளுடன் பேரணியாக நடந்து சென்றனர்.

அங்கு மத்திய, மாநில அரசை கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் காரண மாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE