ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,400 பதவிகளுக்கு 7,137 பேர் போட்டி; அதிகாரபூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2,400 பதவிகளுக்கு மொத்தம் 7,137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டுகள் 17, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 174, கிராம ஊராட்சி தலைவர் 403, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2,943 என மொத்தம் 3,537 பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9-ம் தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து டிசம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 19-ம் தேதி கடைசி நாளாக அறவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து இறுதி வேட்பாளர் விபரங்கள் முழுமையாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,518 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2,057 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,113 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 119 பேர் என மொத்தம் பேர் 9,807 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 98, ஊராட்சித் தலைவர் பதவிக்கு 34, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 10, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 என மொத்தம் 144 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 497 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 596 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 273 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 பேர் என மொத்தம் பேர் 1,396 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

1,130 பேர் போட்டியின்றி தேர்வு..

மேலும், 1095 கிராம ஊராட்சி வார்டுகள், 34 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு என மொத்தம் 1,130 பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனால், இந்த 1,130 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் வரும் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக 1,841 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 369 கிராம ஊராட்சித் தலைவர், 173 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,400 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,828 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1.393 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,29 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 87 பேர் என மொத்தம் 7,137 பேர் களத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,537 பதவிகளில் 1,130 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாலும், 7 பதவிகளுக்கு யாருக்கும் வேட்புமனு தாக்கல் செய்யாததாலும் 1,137 பதவிகளுக்கு தேர்தல் இல்லை. மீதமுள்ள 2,400 பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE