உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாய்ப்பில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரத்தை சேர்ந்த வினோத், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்படவில்லை.

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சிலர் விரும்பமாட்டார்கள். எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் நோட்டாவை தேர்வு செய்து வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. இதன் மூலம் மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் உரிமையை வழங்கும்படி கடந்த 9ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடுபவர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தலை நடத்துவதற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடி வந்துள்ளார். ஆகவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க இயலாது" எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில், இனிவரும் தேர்தல்களிலும் வாக்களர்களுக்கு இந்த உரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE