சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு

திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஜடி) உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களை 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' என்ற பெயரில் மத்திய அரசுக்கு தந்துவிட்டு, புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ளுமாறு மத்தியஅரசு கூறியுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய5 அமைச்சர்கள் கொண்ட குழுவைதமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் பொறியியல் துறையில் உலக அளவில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் புகழ் பெற்ற கல்வி நிறுவனமாக உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் நிதி, சிறப்பு அந்தஸ்து என்று மத்திய அரசின் ஆசை வார்த்தைகளுக்கு தமிழக அரசு மயங்கிவிடக் கூடாது.

அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கைக்குச் சென்றால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு, முஸ்லிம்கள், அருந்ததியர் இடஒதுக்கீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். ஐஐடி போல இங்கும் நுழைவுத் தேர்வு திணிக்கப்படும்.

எனவே, அண்ணா பல்கலைக் கழகத்தை கைப்பற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE