தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?- ரயில் நிலையங்களில் போலீஸார் அதிரடி சோதனை

பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலையடுத்து ரயில்வே காவல் நிலைய உட்கோட்டத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அயோத்தி தீர்ப்பு, குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயணிகள் என்ற போர்வையில், மர்மநபர்கள் யாராவது ரயில் நிலையத்துக்குள் நுழைந்து பயணிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக ரயில்வே காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரயில்வே காவல்துறையினர் அடிக்கடி ‘ஸ்ட்ரோமிங் ஆப்ரேஷன்’ என்ற திடீர் சோதனையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், மாநிலம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை ரயில்வே உட்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை, போத்தனூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘கோவை ரயில்வே உட்கோட்டத்தில் ஏறத்தாழ 130 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10 பாசஞ்சர் ரயில்கள், 50 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயங்கி வருகின்றன. ரயில்வே டிஜிபி உத்தரவை தொடர்ந்து, டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. ரயில்களிலும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE