வாக்குச்சாவடிகளை இணையம் மூலம் கண்காணிக்கும் வசதி: தேர்தல் ஆணையர் உத்தரவு

‘ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், வாக்குச் சாவடிகளில் இணையவழி கண்காணிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, காணொளிக் காட்சி மூலமாக அனைத்து மாவட்டஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப் பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய விவரங்கள் வருமாறு:

தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் நடத்த வாக்குச் சாவடிகளில் இணையவழி கண்காணிப்பை அமைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய, தேர்தல் நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான பாதுகாப்பு திட்டத்தை இறுதி செய்ய வேண்டும். துணை வாக்காளர் பட்டியல் தயார் செய்து அச்சிட வேண்டும்.

காவல் துறை அலுவலர்களுடன் கலந்துஆலோசித்து பதற்றமான மற்றும் பிரச் சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறியவேண்டும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவற்றை செயல்படுத்துவது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன், காவல் துறை தலைவர் (தேர்தல்) ச.ந.சேஷசாய், காவல் கண்காணிப்பாளர் (தேர்தல்) ப.கண்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE