ரூ.12 கோடி வரை தயாரிப்பு உரிமம் கேட்டும் வழங்க மறுப்பு: சேவை நோக்குடன் ‘டாய்லெட் பெட்’ தயாரிக்கும் தொழிலாளி: கண்டுபிடிப்பை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பு

நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் எஸ்.சரவணமுத்து (42). 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த வெல்டிங் தொழிலாளியான இவர், `டாய்லெட் பெட்’ என்ற சாதனத்தை தயாரித்ததற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது பெற்றுள்ளார்.

இதுகுறித்து சரவணமுத்து கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு எனது மனைவிக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டது. சுமார் 3 மாதம் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை. ஒவ்வொரு நாளும் மனைவியை கழிப்பறைக்கு தூக்கிச்செல்வேன்.

அப்போதுதான், படுக்கையிலேயே எவ்வித இடையூறுமின்றி நோயாளிகள் இயற்கை உபாதையைக் கழிக்கும் வகையில் கட்டில் தயாரிக்க திட்டமிட்டேன். கட்டிலில் படுத்திருப்பவர், அத்துடன் இணைக்கப்பட்ட பொத்தானை அழுத்தினால், அவரது இடுப்பின் கீழே கட்டிலில் உள்ள துவாரம் திறந்துகொள்ளும். இயற்கை உபாதையைக் கழித்த பிறகு, மற்றொரு பொத்தானை அழுத்தி, தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தலாம். கட்டிலின் அடியில் இணைக்கப்பட்டுள்ள குழாய் வீட்டின் கழிப்பறைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்தேன்.

சர்வதேச கண்காட்சி

இதை அறிந்த சென்னையைச் சேர்ந்த குருமூர்த்தி என்ற ரயில்வே ஊழியரின் தாயாருக்காக ரூ.45 ஆயிரம் செலவில் டாய்லெட் பெட் தயார் செய்து கொடுத்தேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஜோஸ்குமார் மற்றும் நண்பர்கள் இதன் முக்கியத்துவத்தை, இந்திய ஆராய்ச்சி மையம் மற்றும் மத்திய அரசிடம் கொண்டு சேர்த்தனர். அதன் பலனாக குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது. பிலிப்பைன்ஸ் மற்றும் வெளிநாடுகளில் நடந்த சர்வதேச கண்காட்சியிலும் எனது தயாரிப்பைக் காட்சிப்படுத்தினேன்.

இதற்கான தொழில்நுட்ப உரிமம் கேட்டு ரூ.12 கோடி வரை வழங்குவதாக, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் என்னை அணுகினர். இதற்கு மறுத்துவிட்டேன்.

குறைந்த விலையில்...

ஊனமுற்றோர், நோயாளிகள், வயதானோர் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் எனது தயாரிப்பை வழங்க, மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் மூலம் முயற்சி செய்து வருகி றேன் கட்டில்களை விரைவாக தயார் செய்ய தொழில்நுட்பம் நிறைந்த இயந்திரம் வாங்க ரூ.35 லட்சம் வரை செலவாகும். அந்த இயந்திரம் வாங்கிய பின்னர், குறைந்த விலையில் டாய்லெட் பெட் விநியோகம் செய்வதே எனது இலக்கு என்றார்.

கடந்த 2015-ல் இருந்து இதுவரை 5 டாய்லெட் பெட்களை மட்டுமே சரவணமுத்து தயார் செய்துள்ளார். முதலில் தயாரித்த டாய்லெட் பெட் முழுமையாக படுத்த நிலையில் கழிப்பறை செல்வது போன்றது. அதன்பின்னர், இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதி ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டிலோடு உயர்ந்து, சாய்ந்த நிலையில் அமர வசதி செய்யப்பட்டது. 3-வதாக தற்போது முதியோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், படுக்கையை ஒரு நாற்காலியைப் போல் மடக்கி, கழிப்பறை செல்லவும், மீண்டும் கட்டிலாக மாற்றும் வகையிலும் வடிவமைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE