முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்களும் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறப்பு நிகழ்ச்சி கள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்கின்றனர்.

டெல்லியில் முதல்வருக்கு, தமிழக எம்.பி.க்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின், இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இரவே முதல்வர் சென்னை திரும்புகிறார். முன்னதாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். பிரதமருடனான சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி கோருவதற்கான மனுவை அளிப்பார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE