கடையநல்லூர் தாலுகாவில் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தனி கால்வாய் ஏற்படுத்த தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவேட்டநல்லூர் கிராம விவசாயிகள் சங்க செயலாளர் வேலுச்சாமி மற்றும் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் தாலுகா மடத்துப்பட்டி, திருவேட்டநல்லூர் வேட்டரம்பட்டி, கீழ திருவேட்டநல்லூர், அரியநாயகிபுரம், அருணாசலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கலிங்கன்குளம், சங்கரன்குளம், திருமேனிக்குளம், கருவேலங்குளம், அடைக்கலப்பேரிகுளம், அரசுடையார்குளம் ஆகிய 6 குளங்கள் 14 ஆண்டுகளாக நிரம்பாத நிலையில் உள்ளன. இதனால், நன்செய் நிலங்களில் நெல் மகசூல் செய்ய முடியவில்லை. சுமார் 300 ஏக்கர் நன்செய் நிலங்கள் தரிசு நிலமாக உள்ளன. இந்த 6 குளங்களுக்கும் கருப்பாநதி அணை அல்லது வாலமலையாறு அணை திட்டத்தின் கீழ் தனி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
தென்காசி மங்கமாசாலை, விஸ்வநாததாஸ் காலனி, வடகரை பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் ஹக்கீம் தலைமையில் ஏராளமானோர் மனு அளித்தனர்.
தென்காசி மங்கம்மா சாலை கீழ்புறம் உள்ள வல்லகுளத்தை தூர்வாரி, அதில் இருந்து மறுகால் செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீரை இடையன்குளத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். மேலும், இடையன்குளத்தில் இருந்து ஆய்க்குடி சாலையில் உள்ள பச்சநாயக்கன்குளத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்ல ஓடையை தூர்வார வேண்டும். இந்த 3 குளங்களில் உள்ள கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் மனு அளித்தார்.
ஆலங்குளம் தாலுகா நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “நெட்டூர் சாலைத்தெருவில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. இது தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், நெட்டூர் முதலியார் தெரு, பாரதியார் தெருவிலும் மழை நீர், கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. சாலைகளில் கழிவுநீர், மழை நீர் தேங்காமல் தடுக்க வடிகால் வசதி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும். போதிய அளவுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.
அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் சேக் மைதீன் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சாயமலை, மருதங்கிணறு, பழங்கோட்டை, களப்பங்குளம், நாலாந்துறை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “குருவிகுளம் ஊராட்சி ஒற்றியத்தில் உள்ள பழங்கோட்டை பிர்காவை பிரித்து மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைப்பதற்கு சீராய்வு பணி நடைபெற்று வருவதாக அறிகிறோம். மேலநீலிதநல்லூர் எங்கள் பகுதியில் இருந்து தொலைவில் உள்ளது. பேருந்து வசதி இல்லை. எனவே, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து எங்கள் பகுதியை மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு மாற்றக் கூடாது” என்று வலியுறுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 secs ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago