பாஜகவுக்கு அடிபணியும் அதிமுக; 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு காரணமா?- வேல்முருகன் கேள்வி

By செய்திப்பிரிவு

ஈழத் தமிழர்களைத் தாக்குவது தெரிந்தும் பாஜகவுக்கு அதிமுக அடிபணியக் காரணம் என்ன என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.12) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நேற்று இரவு மாநிலங்களவையில் நிறைவேறியது. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க வகை செய்கிறது.

இப்படி முஸ்லிம்களைப் பாகுபடுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும். அதே சமயம், மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம்பெயர்ந்தவர்கள் பட்டியலில், இலங்கையின் சிங்கள-பவுத்த பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களான ஈழத் தமிழர்கள் சேர்க்கப்படாதது, இன ரீதியில் தமிழர்களுக்குச் செய்யும் வஞ்சகம் மற்றும் இரண்டகமாகும்.

இந்துக்கள் என்பவர்கள் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அப்படியென்றால் திபெத்தியர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்ததெப்படி?

இலங்கையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என ஈழத் தமிழர்கள் மீதான பவுத்த சிங்களர்களின் தொடர் தாக்குதலால் 12 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உலகம் முழுவதும் 40 நாடுகளில் வாழ்கிறார்கள். அந்த நாடுகளிலெல்லாம் அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். கனடாவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நார்வேயிலே தமிழர் மாநகர முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்படி தமிழர்களை ஆட்சிப் பீடத்தில் கூட அமர்த்தியிருக்கின்றன அந்நாடுகள். ஆனால் இந்தியாவில்தான், அதுவும் அவர்களின் தொப்புள்கொடி உறவுள்ள தமிழ்நாட்டில் கூட குடியுரிமையற்றவர்களாக இருக்கிறார்கள்.

1983-க்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் இரண்டரை லட்சம் இந்து தமிழர்கள் குடியுரிமையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். ஆக 37 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் இவர்களுக்கெல்லாம் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

ஆனால் மத்திய அரசு மத ரீதியாக முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கிறது என்றால் ஈழத் தமிழர்களுக்கு இன ரீதியாக குடியுரிமை மறுக்கிறது. இன ரீதியாக மறுப்பதை மறைக்க வேறு சொல்லைப் பயன்படுத்துகிறது. அதாவது ஈழத் தமிழர்களை சட்டவிரோதமாக வந்தவர்கள் என்கிறது. இதை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் உறுதிப்படுத்துகிறார்.

"இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5 இன்படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6 இன்படி இயல்புரிமை அடிப்படையிலும் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமையைப் பெற முடியாதுh."

தமிழ்நாட்டுக்குள் வரும் ஈழத் தமிழர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று சொல்ல ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் யார்? இந்தியாவோ, தமிழ்நாடோ அவர்களின் நாடில்லை. தேர்தல் மூலம் வெறும் 35 விழுக்காடு வாக்குகளையே பெற்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு சட்டவிரோத குடியேறிகள் என்ற வார்த்தையை உபயோகிக்க தகுதியே கிடையாது.

ஆனால் மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, பன்னாட்டு மனித உரிமை சாசனத்திற்கு எதிராக, ஏன் மனிதாபிமானத்திற்கே எதிராக முஸ்லிம்களை மத ரீதியாகவும் தமிழர்களை இன ரீதியாகவும் ஒடுக்குகிறது; இதனால் இந்தியாவையும் பிளவையே சந்திக்கத் தூண்டுகிறது. அப்படி பிளவைச் சந்தித்தால் ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்பே இருக்காது; எந்த ஆட்சிப் பீடமும் கிடைக்காது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தீர்க்க முடியாது தோல்வி கண்டுள்ளது மத்திய அரசு. அதிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே, மடைமாற்றவே இந்தக் குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கையிலெடுத்துள்ளது மத்திய அரசு. பாஜகவின் இந்த வேலைக்கு அதிமுகவும் எப்போதும்போல் தன் ஆதரவைத் தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், இந்த அதிமுக அரசு என்பதே பாஜகவின் பினாமி அரசு என்பதுதான் உண்மை. என்னவென்றால் ஊழலில் சிக்காத அமைச்சர்கள் ஒருவரும் இல்லை. அதைவிடவும் அனர்த்தம், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடமே கவிழக்கூடிய அரசை, தீர்ப்பு வெளிவராமல் தடுத்துவைத்து மத்திய அரசுதான் காப்பாற்றி வருவதே.

அதனால்தான், என்றும் இல்லாத பொருளாதார வீழ்ச்சி, விலையேற்றம், வேலையின்மை, மெகா ஊழல்கள் இவற்றைத் திசை திருப்பவே முஸ்லிம்களைத் தாக்கும் தொடர் நிகழ்வாக குடியுரிமைச் சட்டத் திருத்தமும்!

இது ஈழத் தமிழர்களைத் தாக்குவது தெரிந்தும் பாஜகவுக்கு அடிபணியும் அதிமுக; காரணம், அதிமுக அரசைக் கவிழ்க்கக்கூடிய 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குத் தீர்ப்பு வெளிவராதபடி பாஜக மோடி அரசு பார்த்துக் கொள்வதுதான்" என வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்