காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (டிச.12) பூஜ்ஜிய நேரத்தில் கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து அன்புமணி பேசியதாவது:
"தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலமாகும். தமிழ்நாட்டின் 95% ஆறுகளில், வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை ஆகியவற்றைப் பொறுத்து குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தண்னீர் ஓடும். தமிழ்நாடு தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. காவிரி ஆறு தான் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி பேர் குடிநீருக்காக காவிரியையே நம்பியுள்ளனனர். இது தவிர காவிரி ஆற்று நீரை நம்பி 30 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாசனத்திற்காக காவிரியையே நம்பியுள்ளனர்.
காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இதை 177.25 டிஎம்சியாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
கோதாவரி -காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் மொத்தம் ரூ.65,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். அதைக்கேட்டு தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.
இந்தத் தீட்டத்தை மீண்டும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விரைவாக செயல்படுத்தி முடிக்க வேண்டும். கோதாவரி ஆறு வற்றாத ஜீவ நதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் 3000 டிஎம்சி தண்ணீர் ஓடுகிறது. அவற்றில் 1,100 டிஎம்சி நீர் யாருக்கும் பயனின்றி கடலில் கலக்கிறது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் திட்டமாகும். கோதாவரி ஆற்றின் உபரி நீரில் 1000 டிஎம்சி நீரை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாக காவிரியில் இணைப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 200 டிஎம்சி மட்டும் தான். இந்த இணைப்புத் திட்டத்தால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களும் பயன்பெறும்.
இந்தத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை பிரதமர் தலைமையில் கூட்டி விவாதிக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இத்திட்டத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் பயன் அடையும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நதிகள் இணைப்பு சாத்தியமாவதுடன், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் நிரந்தரமாக தீர்க்கப்படும்.
கடைசியாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இந்தியாவின் மிகவும் வளமான படுகைகளில் காவிரி படுகையும் ஒன்றாகும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அங்கு விவசாயம் மட்டுமே செய்யப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல முடியும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago