மதுரை அரசு மருத்துவமனையில் இறப்பு விகிதம் அதிகரிப்பு; ஆர்டிஐ-யில் தகவல்: சிகிச்சைப் பிரிவுகள் மேம்படுத்தப்படுமா? கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் சிகிச்சையில் இருந்த 2 ஆயிரம் குழந்தைகள் உள்பட 44,723 நோயாளிகள் இறந்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் உள் நோயாளிகள், 10 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மருத்துவமனை சிகிச்சை தரத்தை மேம்படுத்த, சமீபத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், சீமாங் மருத்துவ சிகிச்சைப்பிரிவும், ‘பெட்’ ஸ்கேனும் தொடங்கப்பட்டன.

ஆனால், அதற்கான சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை போதுமான அளவு நியமிக்கப்படவில்லை.

மருத்துவ சிகிச்சை கருவிகளும், படுக்கை வசதிகளும் போதுமானதாக இல்லை. அதனால், சிகிச்சை முடியும் முன்பே நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதும், அறுவை சிகிச்சைகளுக்காகவும், மற்ற உயர் சிகிச்சைகளுக்காகவும் நோயாளிகள் காத்திருப்பதும் நடக்கிறது.

ஒரு புறம் நோயாளிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவது அதிகரிக்கும் நிலையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மரணமும் குறையாமல் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகால மருத்துவமனை இறப்பு விகிதங்களை ஒப்பிடும்போது தற்போது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மருத்துவமனை இறப்பு விகிதம் பற்றி தகவல்கள் பெற்ற மதுரை கே.கே.நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வெரோனிகா கூறியதாவது:

மருத்துவமனையில் 2012-ம் ஆண்டில் 5,594 பேரும், 2013-ல் 5,672 பேரும், 2014-ல் 5,826 பேரும், 2015-ல் 6,388 பேரும், 2016-ல் 6,670 பேரும், 2017-ல் 7,333 பேரும், 2018-ல் 7,240 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.

இதில், 1 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளும் அதிகமானோர் இறந்துள்ளனர். அவர்கள், 2012-ல் 406 பேரும், 2013-ல் 223 பேரும், 2014-ல் 277 பேரும், 2015-ல் 338 பேரும், 2016-ல் 233 பேரும், 2017-ல் 297 பேரும், 2018-ல் 227 பேரும் இறந்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவ சிகிச்சைப்பிரிவு இன்னும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சென்னை எழும்பூரில் இருப்பதுபோன்ற குழந்தைகளுக்கான ஆராய்ச்சி மருத்துவ சிகிச்சை மையம், மதுரையில் தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், தற்போது வரை தொடங்கப்படாததால் குழந்தைகளுக்கான சிக்கலான உயர் மருத்துவ சிகிச்சைகளுக்கு சென்னை எழும்பூருக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

அதுபோல், விபத்தில் காயம் அடைந்து, நோய் முற்றி முடியாதநிலையில் வரும் நோயாளிகளுக்கு அவரசிகிச்சைப் பிரிவில் உள்ள 5ம் நம்பர் டிரெஜ் வார்டில் அதி நவீன உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கப்பட வேண்டும். வெண்டிலேட்டர், மானிட்டர் கருவிகள் கூடுதலாக இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கருவிகள் போதுமானதாக இல்லை.

மாதந்தோறும் மருத்துவமனையில் நடத்தப்படும் இறப்பு தனிக்கை ஆய்வுக்கூட்டங்கள் முறையாகவும், ஆக்கபூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறை அடிப்படையில் செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லை. அனைத்து சிகிச்சைப்பிரிவுகளிலும் சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்களை சார்ந்தே நோயாளிகளுக்கு மருத்துவசிகிச்சை நடக்கிறது. அதனால், நோயாளிகளுக்கான மருத்துவ கவனிப்பு குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது.

2012-ம் ஆண்டில் 5,594 பேர் மட்டுமே சிகிச்சை பலனிக்காமல் இறந்துள்ளனர். ஆனால், அதுவே 2018-ம் ஆண்டு 7240 பேராக உயர்ந்துள்ளனர். 7 ஆண்டுகளில் 44,723 பேர் இறந்துள்ளனர். இந்த 7 ஆண்டில் 1 மாத குழந்தையிலிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள், 2,001 பேர் இறந்துள்ளனர்.

டெங்கு, ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மருத்துவமனை வளாகத்தில் ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வெறு இடங்களில் உள்ளதால் நோயை கண்டறியும் மருத்துவப்பரிசோதனை வேகமாக நடப்பதில்லை. அதுவும் உயிரழிப்பிற்குக் காரணமாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தரமாகவே இருக்கிறது.. மருத்துவமனை தரப்பு விளக்கம்:

மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தென் மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் முடியாதப்பட்சத்திலே பெரும்பாலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

அவர்களுக்கு மருத்துவர்கள், முடிந்தளவு தரமான மருத்துவ சிகிச்சை, கவனிப்பு வழங்குகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் முடியாத என்ற நிலையில் வரும் நோயாளிகள் மட்டுமே அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறக்கின்றனர். அதனால், இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது போல் உள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில்தான் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் தரமான சிகிச்சை வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் ‘டெங்கு’ சிகிச்சைக்கு வந்த குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர். மற்ற உடல் நல கோளாறுகள் இருக்கும் முதியவர்கள் சிலர் மட்டுமே டெங்குவால் இறந்திருக்கு வாய்ப்புள்ளது.

அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரையில் சிகிச்சை தரமாகவே உள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கைவிடுவதால் அவர்களை உறவினர்கள் இறக்கும் தருவாயில் ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வருவதால் அவர்களை சில சமயங்களில் காப்பாற்ற முடியவில்லை, ’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்