முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ராமதாஸ் இன்று (டிச.7) எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் தொடங்கி உயர் நீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள சுங்கச் சாலைகளின் பராமரிப்பு, அநீதியான கட்டண வசூல் ஆகியவை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருப்பது குறித்தும், இந்தச் சாலை முழுவதும் புதிதாக அமைக்கப்படும் வரை சுங்கக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்தும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இவ்வழக்கில் தங்கள் அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியிருப்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையிலான சாலை முழுமையாக மீண்டும் அமைக்கப்படும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு மிகவும் சரியானதுதான். இந்தச் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கூட நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்ற அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் இந்தச் சாலையில் பயணிப்பதே பெரும் தண்டனையாக உள்ளது. இந்தச் சாலையில் அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த நவம்பர் 14-ம் தேதி பாமக சார்பில் வாலாஜா நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும், மதுரவாயல்- வாலாஜா இடையிலான சாலையை நிர்வகித்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் Essel Walajahpet Poonamallee Tolls Road Pvt Ltd (EWPTRPL) நிறுவனம் சாலையை முறையாகப் பராமரிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
என்.ஹெச்.48 தேசிய நெடுஞ்சாலை இந்தியாவின் மிகவும் நீளமான சாலை என்பது மட்டுமின்றி, மிகவும் முக்கியமான சாலையும் கூட. சென்னையில் தொடங்கும் இந்தச் சாலை கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களைக் கடந்து டெல்லியை அடைகிறது. மொத்தம் 2807 கி.மீ. நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் தென்பகுதி தொடக்கமே மிகவும் மோசமாக இருப்பது நல்லதல்ல.
இச்சாலையில் பெங்களூரு முதல் வாலாஜா வரையிலான சாலை ஆறுவழிப் பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை நான்கு வழிப் பாதையாகவே உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அந்தப் பகுதியில் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட ஆறு வழிச் சாலைகூட இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, சென்னை முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையை தரமான 8 வழிச்சாலையாக மாற்ற ஆணையிட வேண்டும்.
அதேபோல், பல சுங்கச்சாலைகளுக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கிறது. 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரனூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக் கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் இப்போது வரை கூடுதலாக ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்குக்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைகள் ஆணையம் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
நெடுஞ்சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடைந்த நாள் வரை பணவீக்கம் கணக்கிடப்பட்டு, அதுவும் திட்டச் செலவில் சேர்க்கப்பட்டது. அதனால் திட்டச் செலவு ரூ.770.18 கோடியாக அதிகரித்து விட்டதாம். அதுமட்டுமின்றி, சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 4% பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்டதுடன், இயக்கச் செலவுகள் என்ற பெயரில் 12% கழிக்கப்பட்டது.
இத்தகைய கழிவுகளுக்குப் பிறகு சுங்கக் கட்டணமாக ரூ.416.04 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ரூ.770 கோடி முதலீட்டைத் திரும்ப எடுக்க இன்னும் ரூ.354 கோடி தேவை என்றும், அதுவரை முழு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த பதிமூன்றரை ஆண்டுகளில் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.1098 கோடியில் ரூ.682 கோடியை, அதாவது மொத்த வசூலில் 63% தொகை பராமரிப்பு மற்றும் இயக்குதலுக்காகச் செலவாகிவிட்டது என்பதை எவரும் ஏற்க மாட்டார்கள். பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் மொத்த முதலீட்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர பரனூர், ஆத்தூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து பதிமூன்றரை ஆண்டுகளில் ரூ.1098 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதையே நம்ப முடியவில்லை. இந்தக் கணக்கின்படி பார்த்தால் இரு சுங்கச்சாவடிகளிலும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் மட்டுமே வசூலாகியிருக்கிறது. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் சராசரியாக தினமும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்லும் நிலையில், இவ்வளவு குறைந்த தொகை தான் வசூலாகியிருக்கிறது என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
நான் குறிப்பிட்டிருப்பது உதாரணத்திற்காக ஒரு சுங்கச்சாவடியின் கணக்கு வழக்கு மட்டும் தான். தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகளின் நிலை இது தான்.
எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
விசாரணை முடிவடையும் வரை 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணையிட வேண்டும்" என ராமதாஸ் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago