உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜக, தேமுதிக, பாமக, தமாகா ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுதவிர, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.டி.ராகவன், தேமுதிக சார்பில் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, கொள்கைபரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமாகா சார்பில் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு தனித்தனியாகவும் ஆலோசனை நடந்தது. இந்தச் சந்திப்பு குறித்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை. பொதுப்படையாக தேர்தலை அணுகுவது பற்றி அவர்கள் கருத்துகளை கூறியுள்ளனர். பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து பேசி முடி வெடுப்போம். மறைமுகம், நேரடி தேர்தலில் இரண்டிலும் நாங்கள் வெற்றி பெற்று வந்துள்ளோம். எந்தத் தேர்தலாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்’’ என்றார்.
தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் கூறும்போது, ‘‘தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்துதான் விவாதித்தோம். இந்ததகவல்களை கட்சியின் தலைவரிடம் தெரிவித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். மறைமுக தேர்தலால் எந்த அதிருப்தியும் இல்லை’’ என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, ‘‘தேர்தலை எப்படி சந்திக்கலாம் என்பது குறித்து பேசினோம். எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் பேசியுள்ளோம். நாங்கள் வலுவாக இருக்கும் இடங்கள், அதிமுக வலுவாக உள்ள இடங்கள் குறித்தும் அதில் நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும்’’ என்றார்.
தமாகா மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், ‘‘தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வார்டு வாரியாக நடைபெறும் என்பதால் மாவட்ட ரீதியாக அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கொள்கை. ஒருவழியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக தேர்தல் பூர்வாங்க வேலைகளை தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து பேசினோம். தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து கூட்டணி கட்சியுடன் பேசப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago