நிர்பயா நிதியில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்த தமிழக அரசு: ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

நிர்பயா நிதியில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே தமிழக அரசு செலவு செய்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (டிச.5) வெளியிட்ட அறிக்கையில், "வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடும் கடைந்தெடுத்த கயவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியில் தமிழ்நாட்டுக்கென அனுமதிக்கப்பட்ட 190 கோடி ரூபாய்த் திட்டங்களில், வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே தமிழக அரசு செலவு செய்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களின் பாதுகாப்புக்கு உயர் முக்கியத்துவம் தராமல், அதிலேயும் கூட புரையோடிப் போயிருக்கும் தமிழக அரசின் அலட்சிய மனப்பான்மைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவையில் 11 ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமி கூட்டு வன்புணர்வுக் கொடுமைக்கு உள்ளாகியிருப்பதும், அதற்கு முன்பு துடியலூர் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், காஞ்சிபுரம் அருகே உள்ள ஆண்டி சிறுவள்ளூரில் இளம்பெண்ணின் மர்ம மரணமும் தாய்மார்களைப் பெரும் பீதியடைய வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தமிழக அரசு உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துப் போக, காவல் துறையை அப்பட்டமாகப் பயன்படுத்தியதன் விளைவாக, இன்றைக்கு மாநிலத்தில் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட 9.65 கோடி ரூபாய் நிர்பயா நிதியினை முழுவதுமாக தமிழக அரசு செலவிடவில்லை, இந்த நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் இந்த அரசால் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்து; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் படுதோல்வி நிரூபணமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாநகராட்சிகள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொலை நகரங்களாக மாறி வருகின்ற நிலையில், அவை பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற நகரங்களாக, பெண்களைப் பொறுத்தவரை நரகங்களாக மாறி விட்டன என்பது மிகுந்த வேதனைக்குரியது.

காந்தியடிகள் கண்ட நள்ளிரவில் அல்ல, இன்றைக்குப் பட்டப் பகலிலேயே கூட ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக நடந்து போக முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பேராபத்து சூழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று விதண்டாவாதமாக முதல்வர் பேட்டியளிப்பார். ஆனால் பொறுப்புள்ள, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் சார்பில் தமிழக அரசின் தவறுகளை ஊழல்களை அலட்சியங்களை மக்கள் விரோதச் செயல்களை நான் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருப்பேன்.

எத்தனை பொய்கள் சொல்லி, அதன் மூலம் அரசியல் செய்தாலும், முதல்வர் தனது நிர்வாகத் திறமையின்மையை திசை திருப்ப நினைத்தாலும், உண்மை நிலவரத்தை நான் மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன்; தயங்க மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, நிர்பயா நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள, பெண்களின் பாதுகாப்புக்கான 190 கோடி ரூபாய் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த, இவ்வளவுக்கும் பிறகாவது முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை, விருப்பு வெறுப்பின்றி, வேண்டியோர் வேண்டாதோர் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல், இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறேனும் உறுதி செய்ய வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்