பாரம்பரிய நெல்களின் பெயரில் தமிழகம் முழுவதும் ஊர்களின் பெயர்கள்: ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய நெல்லின் பெயரால் ஊர்கள் அமைந்துள்ளதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டறிந்துள்ளார்.

ஒவ்வோர் ஊரிலும் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பாக இருக்கும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நில அமைப்புகள், நீர் அமைப்புகளைக் கொண்டு அவ்வூருக்குப் பெயரிடுவது சங்ககாலம் முதல் தமிழர் வழக்கம்.

வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மழைநீர், ஆற்றுநீரைச் சேமித்து வைக்கும் கண்மாய்கள், ஏந்தல்கள், குளங்கள், குட்டைகள், ஊருணிகளின் பெயரில் பல ஊர்கள் உருவாகி உள்ளன.

நெல் பாண்டிய நாட்டின் முக்கிய விளைபொருளாக இருந்துள்ளது. பல ஊர்கள் நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 72 ஊர்கள் கோட்டை என பெயர் பெற்றுள்ளன. கற்கோட்டைகளால் அவ்வூர்களுக்கு இப்பெயர் ஏற்படவில்லை. நெல் விளையும் கோட்டைகள் என்பதால் அப்பெயர் பெற்றுள்ளன.

ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்து வரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, சூரன்குறுவை, வாலான், கூரன், நரியன், புழுதிக்கார், புழுதிவிரட்டி, அரியான் ஆகிய பாரம்பரிய நெல்லின் பெயரால் தமிழ்நாடு முழுதும் ஊர்கள் அமைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,

சூரன்குறுவை

சூரன்குறுவை நெல் 130 நாட்களில் வளரும் தன்மையுடையது. கரும்பழுப்பு நிறமுடைய இதன் அரிசி இட்லி, தோசைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்நெல் பல கோட்டைகள் விளைந்ததால் ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களில் சூரன்கோட்டை என்ற பெயரில் ஊர் உருவாகியுள்ளது. இதேபோல் சூரங்காடு, சூரங்குளம், சூரங்குடி என தமிழ்நாடு முழுதும் பல ஊர்கள் உள்ளன.

இடது சூரன் குறுவை ரக நெல், வலது தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு

வாலான்

நெல் முனையில் வால் போன்று காணப்படுவதால் ‘வாலான்’ எனப்படும் இந்நெல் 160 நாட்களில் வளரக்கூடியது. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இதில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளது. இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுவதால், பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன. ராமநாதபுரம் அருகில் வாலான்தரவை, சாயல்குடி அருகில் வாலம்பட்டி, பரமக்குடி அருகில் வாலான்குடி என இந்நெல்லின் பெயரில் பல ஊர்கள் உருவாகியுள்ளன.

கூரன்

கூரன் என்னும் பாரம்பரிய நெல்வகை குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நெல் தற்போது புழக்கத்தில் இல்லை எனத் தெரிகிறது. சாயல்குடி அருகில் உள்ள கூரன்கோட்டை எனும் ஊர், கூரன் நெல்லின் பெயரால் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

நரியன்

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிடப்படுகின்ற பெருநெல்வகையாகும். இதன் பெயரில் நரியனேந்தல், கீழநரியன், நரியம்பட்டி, நரியன்கொல்லை, நரியனேரி, நரியன்கோட்டை, நரியனூர் என 30க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

புழுதிக்கார், புழுதிவிரட்டி

100 நாட்களில் விளையும் புழுதிவிரட்டி எனும் மட்டநெல் ரகம், கடும் வறட்சியிலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டு வளரக்கூடியது. அதேபோல், புழுதிக்கார் எனும் ரகம் மானாவாரி, இறவைப் பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. நேரடி நெல் விதைப்பு முறைக்கு ஏற்றது. சராசரியாக 130 செ.மீ. வளரக்கூடிய, சிவப்பு நிறமுடைய தடித்த நெல் ரகமாகும். இவற்றின் பெயரால் புழுதிக்குளம், புழுதிக்குட்டை, புழுதிப்பட்டி, புழுதியூர், புழுதிக்குடி என பல ஊர்கள் உருவாகியுள்ளன.

அரியான்

அரியான் நெல், 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி 6½ அடி உயரம் வரை வளரக்கூடியது. இது கடலோரப்பகுதி, ஆற்றுப்படுகைகளிலுள்ள மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரும். அரியான்கோட்டை, அரியான்வயல், அரியனேந்தல், அரியானூர் என தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட ஊர்கள் அரியான் எனும் நெல் பெயரில் உள்ளன.

ராமேசுவரத்தில் உள்ள அரியான்குண்டு சிங்கத்தை சின்னமாகக் கொண்ட கடல்வணிகர்களின் பெயரால் உருவாகியிருக்கலாம். இவ்வூரில் ஒரு பௌத்தப்பள்ளி இருந்துள்ளது.

இவ்வாறு வே.ராஜகுரு கூறினார்.

-எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்