பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைமேடு: அகழாய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் வலியுறுத்தல்

By இரா.கோசிமின்

மதுரை விமான நிலையம் அருகே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏராளமான முதுமக்கள் தாழிகள் நிறைந்த புதை மேட்டை அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் தமிழ் ஆய்வரண் அமைப்பின் நிறுவனர் மகாராசன் கூறியது: இறந்தவர் களின் உடலை புதைத்தல் அல்லது எரியூட்டுதல் என்ற முறையில் அடக்கம் செய்யும் வழக்கம் தற்போதும் இருந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியின் மூலம், இறந்தவர்களை புதைக்கும் முறையே பழங்காலத்தில் பெருவழக்காக இருந்துள்ளதை அறிய முடிகிறது. அதேபோல, மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பிலும் இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் வழக்கம் இருந்துள் ளதை இங்குள்ள புதைமேடுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கற்குவை புதைமேடு

பழங்காலத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்க பல வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழியைப் புதைப்பதற்கு முன், நிலத்தில் ஆழமான குழி தோண்டப்பட்டு, தாழியை புதைத்து மூடி, பின்னர் மண் குவியலுக்கு பதிலாக கற்களை குவித்து வைப்பர். இது கற்குவை புதைமேடு என அழைக்கப்படும். ஒரு தாழியையோ, ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளையோ புதைத்துவிட்டு, அதனைச் சுற்றி வட்டமாக கற்களை நட்டு வைப்பது கல்வட்டம் அல்லது கல்திட்டை எனப்படும். இதுபோன்ற கல்வட்டங்களுக்கு நடுவில் அடையாளக் கல் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. சில நேரங்களில் அடையாளக் கல் இல்லாமலும் கல்வட்ட புதைமேடுகள் அமைக்கப்படும்.

சின்ன உடைப்பு கண்மாயின் மறுகால் வடிநிலப் பகுதி, அய்த்திரும்பு கண்மாய் ஓடையின் வடிநிலப் பகுதி, கூடல் செங்குளம் கண்மாயின் மேட்டுப்பகுதி என 3 நீர்நிலைகள் சூழ்ந்த மேட்டுப் பகுதியில் இதேபோன்ற புதைமேடு அமைந்துள்ளது. இந்த இடம் தாடவைத்தான் காடு என அழைக்கப்படுகிறது. ஆனால், தடயம் வைத்தான் காடு என்ற பெயரே, தாட வைத்தான் காடு என திரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து நிறைய பழங்கால ஓட்டைக் காசுகளை இளம் வயதில் சேகரித்ததாக அப்பகுதி முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள தே.கல்லுப் பட்டி, அனுப்பானடி, மாடக்குளம் கோவலன் பொட்டல், துவரிமான், பரவை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில், பெருங்கற்கால மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.

அதுபோலவே, அரசு மற்றும் தனியார் என 40 முதல் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் சின்ன உடைப்பு கண்மாய் புதைமேட்டில் 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த புதைமேட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை. இங்கே இருந்த கல்வட்டங்களில் பலவற்றை அகற்றி உள்ளனர். இந்த வரலாறு அழியும் நிலையில் உள்ளது. இந்த ஈமக்காடு பெருங்கற்கால தொன்மையின் அடையாளப் பதிவாக உள்ளது. எனவே, வரலாற்று தொல்லியல் நிலப்பகுதியாக இந்த இடத்தை பாதுகாத்து அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த கண்மாயில் காணப்படும் முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்தால், மதுரையில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாறு குறித்த புதிய தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்