சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கன மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

By செய்திப்பிரிவு

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் 19 இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

சென்னை மாநகரப் பகுதிகளை விட புதிதாக இணைக்கப்பட்ட மாநகரப் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை அதிகமாக பெய்தது. அதன் காரணமாக ஆலந்தூர், மடிப்பாக்கம், ராம்நகர், புழுதிவாக்கத்தில் உள்ள பாலாஜி நகர், ராவணன் நகர், ஜெயாநகர், கணேஷ் நகர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வளசரவாக்கம், போரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. குறிப்பாக பெருங்குடி மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், மழைநீர் தேக்கம் குறித்து புகார்களை கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை நீடித்து வருவதால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கனமழை காரணமாக அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை, நேரு நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஷேக்அலி (49) மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் நேற்று முன்தினம் இரவு தவறி விழுந்து உயிரிழந்தார்.

மேலும் மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 24 மணி நேரம் இயங்க கூடிய கட்டுபாட்டு அறையின் 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 19 இடங்களில் மழைநீர் தேங்கியும், 11 இடங்களில் மரக்கிளைகள் விழுந்தும் உள்ளன. அனைத்து இடங்களிலும் தேங்கிய மழைநீர் மற்றும் விழுந்த மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெருஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீரை வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பாம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதியில்..

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டனர். சிலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து அரசு சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

சேலையூர் மற்றும் செம்பாக்கம் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், மழைநீரும் பெருக்கெடுத்ததால், குடியிருப்பு பகுதிகள் ஆங்காங்கே தீவுகள் போல் காட்சியளித்தன. தாம்பரம் - வேளச்சேரி சாலை, தாம்பரம் - முடிச்சூர் சாலை, அகரம் தென் சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை, மேடவாக்கம் - பெரும்பாக்கம் சாலை, மேடவாக்கம் - பொன்மார்சாலை, மேடவாக்கம் - மடிப்பாக்கம் சாலை என பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம், இரும்புலியூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை வரையுள்ள தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். சிட்லப்பாக்கம் பகுதியில் கார்த்திக் அவென்யூ, பிரதான சாலை மற்றும் சுற்றுவட்ட பகுதி சாலைகள், கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம், திருவஞ்சேரி, அகரம்தென், சத்தியா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியுள்ளது. அதே போல் பல்லாவரம் தர்கா சாலை, ஈஸ்வரி நகர் போன்ற சுரங்கப்பாதைகள் மூழ்கின. இதனால் வாகன ஒட்டிகள் அவதிப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் சுரங்கப்பாதையில் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்