கனமழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமரி உட்பட 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு விரைந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

By செய்திப்பிரிவு

கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மீ்ட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வழக்கத்தை விட 64 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்துள்ளது. கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமான அளவு மழை பெய்துள்ளது. வேலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை நிவாரண முகாம்களில் தங்கவைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கடலூர் மாவட்டத்தில் 4 முகாம்களில் 800-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 2 முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்
பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் மழை குறைந்த நிலையில், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். தற்போது கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள 4 ஆயிரத்து 399 இடங்களில் மழைநீர் தேக்கம் ஏற்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. இதுபோன்ற நேரங்களில் நீர்நிலைகளின் அருகில் செல்வதை குழந்தைகள் உட்பட அனைவரும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE