நாகப்பட்டினம் மாவட்டம் வடகரையில் ஒரே ஒரு மாணவிக்காக 4 பேர் பணியாற்றும் அரசுப் பள்ளி: சுகாதாரத்தை மேம்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

தாயு. செந்தில்குமார்

நாகை மாவட்டம் வடகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவிக்காக 4 பேர் பணியாற்றி வருகின்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்பனார்கோவில் ஒன்றியம் இளையாளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகரையில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் அதிக அளவில் பெண்கள் படித்து வந்தனர். தனியார் பள்ளி மோகத்தாலும், நகர்ப்புற பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் என்பதாலும், ஆங்கில அறிவு மேம்பட வேண்டும் என் பதற்காகவும் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இதனால் கடந்த ஆண்டு வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியில் 4 மாணவிகள் மட்டுமே படித்து வந்த நிலை யில் அவர்களில் 3 பேர் வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டதால், தற்போது ஒரே ஒரு மாணவி மட்டுமே பயில்கிறார். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், சமையலர், உதவியாளர் என 4 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

அரசு நிதி விரயமாவதை தவிர்க்க 5 மாணவர்களுக்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடத்தை காலியிடமாக வைத்துவிட்டு, தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு கல்வித் துறை இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிவரும் உதவி ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அப்பள்ளிக்கு செல்லாமல் வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியிலேயே பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியின் அருகில் கழிவுகள் தேங்கும் தொட்டி உள்ளது. மேலும் திறந்த வெளி கழிப்பறையாக உள்ள ஆற்றங் கரைக்கு அருகில் இப்பள்ளி உள்ள நிலையில் மழைக்காலம் என்பதால் மதியம் 3 மணிக்கே கொசுக்களின் தொல்லை அதிகரித்து விடும். இங்கு தங்கள் பிள் ளைகளைச் சேர்த்தால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதால் வேறு பள்ளிகளில் சேர்ப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து வடகரை பள்ளியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும், வடகரை பெண்கள் தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சூழலைக் காப்பதுடன் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தினரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE