கி. பார்த்திபன்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது திருமூலரின் வாக்கு. ஆனால், இன்று உணவே விஷமாக மாறும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. செயற்கை உரங்கள், உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களே இதற்கு காரணம். இதனால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் நேரிட வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும், அந்தந்த மண்ணுக்கேற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும், இதுவே உடலுக்கு உகந்தது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, பருவம் தவறி பெய்யும் மழை, அதனால் ஏற்படும் வறட்சி போன்றவை விவசாயத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனினும், செயற்கை உரங்களின் தீவிரத்தை உணர்ந்த சில விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வதுடன், பிற விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பி.சரவணன் தனக்கு சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்திலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதுடன், அதன்மூலம் நல்ல மகசூல் எடுத்து பிறருக்கு முன்மாதிரி விவசாயியாகவும் விளங்கி வருகிறார். இதற்காக அவருக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.
இதையறிந்து அவரது தோட்டத்திற்கு சென்றபோது, அவரது தோட்டத்தின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள உயிர்வேலி முதற்கொண்டு அனைத்தும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியுடன் அவரை அணுகினோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது: மொத்தம் ஆறரை ஏக்கர் நிலம் உள்ளது. மரவள்ளி, மஞ்சள், புடல், பீர்க்கன் உள்ளிட்டவை நடவு செய்துள்ளேன். வறட்சி காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்த தொடங்கினேன்.
அப்போது விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் பயிர் சருகு நோயால் பாதிப்பிற்குள்ளானது. வேளாண் துறையினர் அறிவுறுத்தல்படி இயற்கை உரம் பயன்படுத்தி நோய் தீவிரத்தைக் கட்டுப்படுத்தினேன். அந்த ஆண்டு முதல் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறத் தொடங்கினேன். கடந்த 2013-ம் ஆண்டு முதல் முற்றிலுமாக ஆமணக்கு, வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்கிறேன். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் துறையினரிடம் சிக்கலான சமயங்களில் ஆலோசனைக் கேட்பேன். அவர்களது அறிவுறுத்தல்படி இயற்கை உரங்களை பயன்படுத்துகிறேன். ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற வகையில் மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவை வளர்க்கிறேன். போதிய தண்ணீ்ர் இல்லாததால் மீன் வளர்ப்பு மேற்கொள்ள இயலவில்லை. மாடுகளின் கோமியம் மூலம் பஞ்சகாவ்யம் தயாரிக்கப்படுகிறது.
மாட்டுப் பட்டியில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் தொட்டிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், மண்புழு உரமும் தோட்டத்தின் ஒரு பகுதியில் தயாரிக்கப்படுகிறது. இவை எனது பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்துகிறேன். மேலும், விவசாய தோட்டத்தில் பந்தல் அமைத்து பீர்க்கன், புடல் சாகுபடி செய்கிறேன். காய்கறியில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவது வழக்கம். ஆனால், வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனையின்பேரில் விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டுவந்து தோட்டத்தில் விட்டுள்ளேன். அதுபோல், பூச்சிகள் தானாக வந்து விழும் வகையில் ஆங்காங்கு சிறுசிறு தண்ணீர் டப்பா உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து எழும் மணத்தால் கவரப்படும் பூச்சிகள் டப்பாவில் உள்ள தண்ணீரில் விழுந்துவிடும். பின்னர், அவை அழிக்கப்படும். நன்மை செய்யும் பூச்சிகள் அதிகமானாலும் பயிர்களுக்கு பாதிப்பு நேரிடும். அப்போது பயிர் பாதிக்காத வண்ணம் மிளகாய் பொடி ஸ்பிரே செய்து பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். இதன்மூலம் நல்ல மகசூல் கிடைக்கிறது. நாள்தோறும் அறுவடை செய்யப்படும் காய்கறி அளவு குறித்து பதிவேட்டில் எழுதி வருகிறேன். காய்கறிகளில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தியதற்காக மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஏஆர்) மூலம் சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இதுபோல், ஹைதராபாத்தில் நடந்த விழாவிலும் ஐசிஏஆர் மூலம் விருது வழங்கப்பட்டது. மேலும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் விருது வழங்கப்பட்டுள்ளது. அருகே உள்ள விவசாய தோட்டங்களில் ரசாயனஉரங்கள் பயன்படுத்தினால், அவை நமது தோட்டத்தில் உள்ள பயிர்களை தாக்காத வண்ணம் இருக்க தோட்டத்தைச் சுற்றிலும் அரளிச்செடி நடவு செய்துள்ளேன். இது உயிர்வேலி என அழைக்கப்படும். அருகே உள்ள தோட்டத்தில் ரசாயன உரம் பயன்படுத்தினால், அவை நமது தோட்டத்தில் பரவாமல் உயிர்வேலி தடுத்துவிடும்.
இதுபோல் பீர்க்கன், புடல் நடவு செய்யப்பட்ட தோட்டத்தில் களைகள் முளைக்காமல் இருக்க கொள்ளு விதைக்கப்பட்டுள்ளது. இதனால், களைச்செடிகள் முளைக்காது. அறுவடை செய்யப்படும் கொள்ளும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஹைட்ரோ போனிக் எனும் மண்ணில்லா தீவனப் பயிர் வளர்ப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது. இது ஆவின் மூலம் வழங்கப்பட்டது. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் தீவனம் கறவை மாடுகளுக்கு போதுமானதாக உள்ளது. இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் பெருகும். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் விவசாயமும் மேற்கொள்ள முடியும். நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் காய்கறி ராசிபுரம் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதி முழுவதும் கிணற்றுப் பாசனத்தை நம்பியே இருப்பதால் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். பயிர்தொழில் பழக விரும்புவோர் இவரது விவசாய தோட்டத்தையும், பராமரிப்பு முறையையும் பார்த்தாலே போதும் என்றால் அது மிகையாகாது
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago