‘இந்திய நாடு மேலும் வளர்ச்சி அடைய, மாணவர் களிடம் சிறு பொறியாக உள்ள அறிவியல் அறிவை பெரும் தீயாக வளர்த்தெடுக்க வேண்டும்’ என்று தேசிய ஆராய்ச்சி மன்ற தலைவரும், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினார்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றமும் இணைந்து நடத்தின. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கடந்த இரண்டு மாதத் துக்கும் மேலாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு தங்களது ஆய்வறிக்கைகளை தயாரித்தனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மண்டல அளவிலான அறிவியல் திரு விழாக்களில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப் பித்தனர். ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் தலா 25 ஆய்வுக் குழுக்கள் தேர்வு செய்யப் பட்டு வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநில அறிவியல் திரு விழாவில் ஆய்வறிக்கைகைளை சமர்ப்பித்தனர்.
அறிவியல் திருவிழாவை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் அறிவியல் திருவிழாவின் நோக்கம் பற்றி பேசினார். இந்த அறிவியல் திருவிழாவில் ஆய்வுக் குழு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசு களையும் வழங்கி மயில்சாமி அண்ணாதுரை பாராட்டிப் பேசினார். அவர் தனது உரையில், “இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்றது மிகவும் மன நிறைவாக உள்ளது.
ஹைட்ரஜனில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனத்தை ஒரு ஆய்வுக் குழுவினர் வடிவமைத்துள்ளதை இங்கு பார்த்தேன். இது தொடர்பாக ஏற்கெனவே பலர் மேற்கொண்டு வரும் முயற்சியில் இந்த மாணவர்கள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி உள்ளனர். இத்தகைய முயற்சியை ஒரு சரித்திரத்துக்கான விதை இங்கு விழுந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
அறிவியல் துறையில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா வளர்ந்த நாடாகத்தான் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில், பிற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி கண்டது. இத்தகைய சிறப்பு கொண்ட இந்திய நாடு அறிவியல் துறையில் மேலும் வளர வேண்டுமானால், நம் மாணவர்களிடம் சிறு பொறியாக இருக்கும் அறிவியல் அறிவை பெரும் தீயாக வளர்த்தெடுக்க வேண்டும்.
அந்த வகையில் பார்க்கும்போது, விஐடி பல்கலைக்கழகம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முயற்சிகளால் நடைபெறும் ‘நாளைய விஞ்ஞானி’ அறிவியல் திருவிழா, மிக முக்கிய பணியாக திகழ்கிறது. இந்த திருவிழாவில் மாணவர்கள் முன்வைத்த புதிய அறிவியல் சிந்தனைகளை ஆராய்ந்து, மெருகூட்டி, மேலும் மேம்படுத்த விஞ்ஞானிகளாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
ஆய்வு மாணவர்களை வாழ்த்திப் பேசிய ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு:
இப்போது நாம் சரியான பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறோம். அறிவியலும் ஆராய்ச்சியும் தேசத்தின் ஒட்டுமொத்த முழக்கமாக கேட்கிறது. இது வெறும் முழக்கமாக மட்டுமின்றி நம்முடைய வாழ்வியலின் ஒரு வழக்கமாக மாற வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்டால் இந்தியா மேலும் மேலும் வளர்ந்த நாடாக உயரும். அதேபோல், மாணவர்களாகிய நீங்கள் மக்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை தர வேண்டும். அப்போது, இந்த தேசம் உங்களை கொண்டாடும்.
விஐடி பல்கலைக்கழக பதிவாளர் சத்திய நாராயணன்:
தமிழர்களிடம் அறிவு வளமும், உடல் பலமும் அதிகம் உள்ளது. எனினும் நாம் அவற்றை சரியாக பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, கிராமப்புற மாணவர்களை விளை யாட்டில் நாம் சிறப்பாக பயன்படுத்தினால் ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் நிறைய பதக் கங்களை குவிக்க முடியும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி:
இந்தியா பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலிலேயே உள்ளது. விரைவிலேயே நாம் வளர்ந்த நாடு என்ற பட்டியலுக்கு உயர வேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிய ‘நாளைய விஞ்ஞானி’ போன்ற அறிவியல் திருவிழாக்கள் பெரும் உதவியாக இருக்கும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன்:
பிரம்புகள் இல்லாத வகுப்பறைகள், சுமைகள் இல்லாத பாடத்திட்டம், வாழ்வியலோடு தொடர்புள்ள கல்வி முறை போன்றவை வேண்டும் என்பது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நோக்கமாக உள்ளது. நம்மைச் சுற்றிலும் காணும் நிகழ்வுகளுக்கான காரணங்களை அறிய ஏன், எதற்கு எப்படி போன்ற கேள்விகளை மாணவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அத்தகைய கல்வி நம் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
அறிவியல் திருவிழாவில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், விநியோகப் பிரிவுத் தலைவர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறிவியல் திருவிழாப் பணிகளை தலைமை நிருபர் (சென்னை பதிப்பு) வி.தேவதாசன் ஒருங் கிணைத்து நடத்தினார். அறிவியல் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.
ஊக்கப் பரிசு பெற்ற பள்ளிகள்
அறிவியல் திருவிழாவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மான்டசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு கே-போடிக்ஸ் ரோபாடிக்ஸ் பயிற்சி மையம், நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்ச கொல்லை குமரன் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமேலுப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் அல்போன்சா மேல்நிலைப் பள்ளி, சென்னை எழும்பூர் சிவகாசி இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ஊக்கப் பரிசினை பெற்றனர்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்:
அறிவியல் உலகில் அதிகப் படியாக 1,093 பொருட் களை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரைப் போலவே உங்களில் சிலர் எடிசனாக வர வேண்டும் என்பது எனது விருப்பம். இளைஞர்கள் வேகமாக செயல்படுபவர்கள், அதில் கொஞ்சம் விவேகத்தையும் சேர்த்துவிட வேண்டும். அறிவியலை பயன்படுத்திதான் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் வளர்ந்துள்ளன.
இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று நமது பிரதமர் கூறி வருகிறார். இது முடியாதது அல்ல. நம்மிடம் இருக்கும் இளைஞர்களின் சக்தியை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும், உழைப்பதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும். ஒரு நாடு முன்னேற அங்கு விவசாயமும், தொழில் துறையும் வளர வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 41 ஆயிரம் ஏரிகள் உள்ளன. அங்கெல்லாம் மழை நீர் சேகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோதாவரி ஆற்றில் இருந்து மட்டும் ஆண்டு தோறும் 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதில், ஒரு பகுதியை தென் மாநிலங்களுக்கு திருப்பி விட்டால் இங்கு மாபெரும் வளர்ச்சியை காணலாம்.‘இந்து தமிழ் திசை’
நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன்:
இந்த நிகழ்ச்சிக்கு பல தனித்தன்மைகள் உள்ளன. குறிப்பாக, இந்த நாட்டுக்கான நாளைய விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிப்பது பிரதான நோக்கமாக உள்ளது. தமிழ் நாட்டு மக்களுக்கான சரியான ஊடகமாக திகழும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இந்த அறிவியல் திருவிழாவை முன்னின்று நடத்த வித்திட்ட விஐடி பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான பள்ளிகளோடு தொடர்பில் இருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago