போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயவுக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள இலங்கை அதிபர் கோத்தபயவுக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.21) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை வரும் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்துள்ள கோத்தபய ராஜபக்ச, ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபய, தமது அரசு நிர்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கை இறுதிப் போரின்போது அந்நாட்டு ராணுவத்தின் 53 ஆவது படையணியின் தலைவராக இருந்த கமல் குணரத்ன என்ற தளபதி, ஈழத்தமிழர்களை கொடூரமான முறையில் கும்பல், கும்பலாக படுகொலை செய்தார். இறுதிப் போரில் சரணடைந்த தமிழர்களைக் கூட கொடூரமாக கொலை செய்த குணரத்ன, ஐநா மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

அத்தகைய போர்க்குற்றவாளியைத்தான், ஏற்கெனவே தாம் அனுபவித்து வந்த இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் பதவியில் கோத்தபய அமர்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலக வைத்த கோத்தபய, அந்தப் பதவியில் தமது சகோதரரும், இலங்கை இறுதிப்போரின்போது அதிபராக இருந்தவருமான மகிந்த ராஜபக்சவை அமர்த்தியிருக்கிறார்.

இலங்கை அரசு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற நான்கு பதவிகள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர், போர்ப்படை தளபதி ஆகியவைதான். இவற்றில் முதல் 3 பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள்தான் அமர்த்தப்பட்டுள்ளனர். போர்ப்படை தளபதியாக இலங்கைப் போரில் முக்கியப் பங்காற்றிய தளபதி ஒருவரை அமர்த்த கோத்தபய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இலங்கையின் 4 முக்கியப் பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள் அமர்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஐநா போர்க்குற்ற விசாரணை முடக்கப்படும் என்று கோத்தபய ராஜபக்ச கூறி வந்தார். அவரது ஆட்சியில் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமின்றி, இனி இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதுடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு. தெற்காசியாவின் வல்லரசு என்பது மட்டுமின்றி, ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையிலும் இதை இந்தியா செய்ய வேண்டும் என்பது தான் உலகத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இத்தகைய சூழலில்தான் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குதான் வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று அவர் இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபயவை அவசர அவசரமாக டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்துவதன் நோக்கத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ராஜபக்ச சகோதரர்கள் சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அவர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது; இந்தியாவை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பதுதான் அவரை அழைத்ததன் நோக்கம் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த கோணத்தில் இதன் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் இலங்கையை சீனாவிடமிருந்து ஈர்ப்பதற்கான விலையாக ஈழத்தமிழர்கள் நலனைக் காவு கொடுத்து விடக்கூடாது. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், போர்ப்படை தளபதிகளும் தண்டனையின்றி தப்பிப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களுடன் கோத்தபய பேச்சு நடத்தும் போது, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும்; போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கு 18-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு கூடுதலாகவும் வழங்கப்பட வேண்டிய அரசியல் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் வெளியேற்றப்பட வேண்டும்; தமிழர்களிடமிருந்து வரவழைக்கப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும் கோத்தபய ராஜபக்சவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்த வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்