தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை பரபரப்புக்காக விடுவதை விட்டுவிட்டு எமது தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயல்படுங்கள் என ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு நமல் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்சவின் மகனுமான நமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாகச் சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கபூர்வமான செயல்பாடுகளைச் செய்ததுமில்லை.
சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதுதான் மிகுந்த வேதனை தரும் உண்மை. கோத்தபய ராஜபக்ச இலங்கையின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டபோது பல நாடுகளின் தலைவர்கள், இந்தியப் பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சுயநல, சந்தர்ப்பவாத அரசியலை தக்கவைக்க எமது நாட்டின் தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் வைகோ, திருமாவளவன், ராமதாஸ், பழ.நெடுமாறன் ஆகியோர் அறிக்கைகளைக் கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அதில் வேறேதும் இல்லை. எமது மக்களைப் பகடைக்காய்களாக்கும், எமது மக்களிடையே பகையையும், துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான செயலைச் செய்திருக்கிறீர்கள் எனும் கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
2009-ல் யுத்தம் நிறைவடைந்த காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதியின் கட்சியான திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் பார்வையிட்டதுடன் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விஷயம்.
அந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டதுடன் எம்முடன் சினேக பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். எமது நிலைப்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
எமது அதிபர் உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில் நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால அதிபர் மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.
ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பு ஏற்படுத்துவதை விடுத்து, எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழகத் தலைவர்களாக நீங்கள் இருந்தால், எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago