கொடிக்கம்பம் விழுந்ததால்தான் விபத்து; இளம் பெண்ணின் சிகிச்சைக்கு உதவ வேண்டும்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

கோவையில் லாரி மோதிய விபத்தில் இளம்பெண்ணின் ஒரு காலை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த நாகநாதன் மகள் ராஜேஸ்வரி என்ற அனுராதா (31). நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 11-ம் தேதி விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றபோது, கோல்டுவின்ஸ் அருகே விபத்தில் சிக்கினார். பின்னால், வந்த லாரி ஏறியதில் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கின.

மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த விஜயானந்த்(34) என்பவரும் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜபாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகனைக் கைது செய்தனர்.

படுகாயமடைந்த ராஜேஸ்வரிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோல்டுவின்ஸ் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக ராஜேஸ்வரியின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காவல்துறையினர் இதை மறுத்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய ராஜேஷ்வரி இன்னும் சுயநினைவுக்குத் திரும்பவில்லை. குடும்பத்துடன் சிங்காநல்லூரில் வசித்து வந்த இவரது குடும்பம் சில தினங்களுக்கு முன் கோவைக்கு மாறியது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். விபத்து காரணமாக லட்சக்கணக்கில் பணம் செலவாவதால் மேலும் சிரமங்களைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ராஜேஷ்வரியின் ஒரு காலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். மற்றொரு காலில் பலமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நினைவு திரும்பாத நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்தப்பெண்ணுக்கு முதல்வர் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

சாதாரண குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ்நாள் துயரம் இது...

கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை

உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் ....@CMOTamilNadu@SPVelumanicbe

இந்தப் பெண்ணிற்கு உதவவேண்டும் ..@BJP4TamilNadu

என கோரிக்கை வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE